பதிவு செய்த நாள்
22
ஏப்
2025
10:04
மயிலாடுதுறை; சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் நகரத்தார் மக்கள் குலதெய்வ வழிபாடு நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் பிரசித்தி பெற்ற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. நவகிரகங்களில் முதன்மையான செவ்வாய் ஸ்தலமாகவும், முருக பெருமான் முத்துகுமார சுவாமியாகவும்,சித்த வைத்திய அதிபதியான தன்வந்திரி தனி சன்னிதியிலும் அருள்பாலித்து வருகின்றனர். இக்கோவிலின் சித்திரை மாத திருவிழாவின் முக்கிய நிகழ்வான நகரத்தார் குலதெய்வ வழிபாடு நடைபெற்று வருகிறது.காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர்,ஒரத்தநாடு, கந்தர்வகோட்டை, பேராவூரணி, கீழசீவல்பட்டி, பரமகுடி,திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தி தங்கள் குல தெய்வ வழிபாட்டை நிறைவேற்றி வருகின்றனர்.
ஆண்டு தோறும் சித்திரை மாதம் இரண்டாவது செவ்வாய் கிழமை பாதயாத்திரையாக வந்து தங்கள் குலதெய்வமான தையல்நாயகியை வழிபடுவது வழக்கம்.சித்திரை மாதம் முதல் செவ்வாய் அன்று தங்கள் வேண்டுதல் நிறைவேற வீட்டில் மஞ்சள் தடவிய குச்சியை வைத்து பூஜித்து பாதயாத்திரை துவங்கும் மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக அந்த குச்சியை கோவில் கொடிமரத்தில் செலுத்துகின்றனர்.பின்னர் அம்பாள் மற்றும் சுவாமியை தரிசித்து வழிபடும் நகரத்தார் மக்கள் தங்களுடைய புதிய வேண்டுதலுக்காக கொடிமரத்தில் இருந்து மாற்று குச்சியை எடுத்து செல்வதும் இம்மக்களின் வழக்கமாக உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையிலான 200 க்கும் மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் பக்தர்கள் வசதிக்காக வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து பட்டுக்கோட்டை தஞ்சாவூர் திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.