பதிவு செய்த நாள்
23
ஏப்
2025
11:04
கோவை,; கோவையின் குலதெய்வமாக போற்றப்படும் தண்டுமாரியம்மனுக்கு, நேற்று மாலை பக்தர்கள் சூழ மங்கள வாத்தியங்கள் முழங்க, திருக்கல்யாண வைபவம் நடந்தது.
கோவை – அவிநாசி ரோடு மேம்பாலம் அருகே உள்ள தண்டுமாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா, 14ல் மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து கொடியேற்றம், பூச்சாட்டு, அக்னிச்சாட்டு, திருவிளக்கு வழிபாடு நடந்தது. அன்றாடம் யாகசாலை பூஜைகளை தொடர்ந்து ஒவ்வொரு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்தார். நேற்று மாலை அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் பக்தர்கள் சூழ நடந்தது.முன்னதாக, கோவில் அரங்கில் பட்டாடை, ஆபரணங்கள் அணிவித்துசிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருள்விக்கப்பட்டார்.
அக்னியை யாகசாலையில் எழுந்தருளச் செய்து, சிவாச்சாரியார்கள் கணபதியை துதித்து பாடல்களை பாடி வேத மந்திரங்களை பாராயணம் செய்தனர். மஞ்சள், குங்குமம், சந்தனம், வளையல், பழங்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட சீர்வரிசையை பக்தர்கள் எடுத்து வந்து அம்மனுக்கு சமர்ப்பித்தனர். மங்கள வாத்தியங்கள் பக்தர்களின் குலவை ஓசையுடன் யாகசாலையில் வைக்கப்பட்டு, பூஜிக்கப்பட்ட மாங்கல்ய சரடை சிவாச்சாரியார்கள் எடுத்து அம்மனுக்கு அணிவித்தனர். தொடர்ந்து உரலில் சுன்னம் இடித்தல், மாலை மாற்றுதல், தேங்காய் உருட்டுதல், மொய்ப்பணம் சமர்பித்தல், விருந்து பரிமாறுதல் உள்ளிட்ட வைபவங்கள் நடந்தது. பாரம்பரியமும் கலாச்சாரமும் மாறாமல் திருமணவைபவம் பக்தர்கள் சூழ விமரிசையாகநடந்தது. அனைவருக்கும் விருந்து பரிமாறப்பட்டது. நல்வாழ்வு வேண்டி பக்தர்கள் அம்மனை வழிபட்டனர், அனைவருக்கும் மங்கலபொருட்கள் வழங்கப்பட்டன.