திருக்காட்டுப்பள்ளி கோலவில்லிராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2025 12:04
மயிலாடுதுறை; திருக்காட்டுப்பள்ளி கோலவில்லிராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
திருக்காட்டுப்பள்ளியில் கோலாகலமாக நடந்த கோலவில்லிராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் ஸ்ரீஸ்ரீ முரளிதர சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருக்காட்டுப்பள்ளியில் கோலவில்லிராமர் கோவில் அமைந்துள்ளது. வைணவ திவ்ய தேசங்களில் 108 தலங்களில் 39வது கோவிலான பார்த்தன் பள்ளி பார்த்தசாரதி பெருமாளை மங்களா சாசனம் செய்த திருமங்கை ஆழ்வார் இத்தலத்தில் அருள் பாலிக்கும் கோலவில்லிராமரையும் மங்களா சாசனம் செய்துள்ளார். இக்கோவில் ராமரை தரிசித்தால் திருமண தடை நீங்கி, ஆயுள் விருத்தியும், சாவ பாவ தோஷங்கள் நிவர்த்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். மிகப் பழமை வாய்ந்த இக்கோவிலில் திருப்பணிகள் சென்னை ஜெய் ஹனுமான் சேவா டிரஸ்ட் மற்றும் தி சென்னை சில்க்ஸ் குழும நிர்வாக இயக்குனர் நந்தகோபால் ஆகியோரால் செய்து முடிக்கப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 20ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன், 21ம் தேதி முதல் காலை யாகசாலை பூஜைகள் தொடங்கின. இன்று காலை 5 ஆம் காலை யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோலவில்லிராமர் தாயாருடன் கோவில் பிரசாரத்தில் எழுந்தருள யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது. இதனை அடுத்து சதய நட்சத்திரத்துடன் கூடிய மிதுன லக்னத்தில் காலை 10 மணிக்கு ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகள் முன்னிலையில் பட்டாச்சாரியார்கள் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ராமபிரானை தரிசனம் செய்தனர்.