பதிவு செய்த நாள்
26
ஏப்
2025
04:04
மயிலாடுதுறை: கீழப்பெரும்பள்ளம் கோவிலில் நடந்த கேது பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கீழப்பெரும்பள்ளத்தில் சௌந்தர நாயகி சமேத நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு கேது பகவான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கேது பகவான் பரிகார ஸ்தலமான இக்கோவிலில் இன்று கேது பெயர்ச்சி விழா நடந்தது. நவகிரகங்களில் முதன்மை மூர்த்தியான ஞானகாரகன் என்று அழைக்கப்படும் கேது பகவான் ஒன்னரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின்னோக்கி பெயர்ச்சி அடைகிறார். அதன்படி இன்று மாலை 4:20 மணிக்கு கேது பகவான் கன்னி ராசியிலிருந்து, சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதையடுத்து மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் ஆகிய 9 ராசியை உடையவர்கள் பரிகாரம் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கீழப்பெரும்பள்ளம் கோவிலில் கேது பெயர்ச்சியை முன்னிட்டு நேற்று முதல் சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. இன்று மதியம் 3 மணிக்கு பூர்ணாஹுதி, மற்றும் மகா தீபாராதனை நடந்தது. மங்கள வாத்தியங்கள் இசைக்க கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்தது. தொடர்ந்து கேது பகவானுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு இறுதியாக யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கேது பெயர்ச்சியாகும் 4:20 மணிக்கு கேது பகவானுக்கு மகா தீப ஆராதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பட்டு, கல்யாணசுந்தரம், கார்த்திகேயன் குருக்கள் அபிஷேகம் மற்றும் பூஜைகளை நடத்தி வைத்தனர். கேது பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அன்பரசன் தலைமையிலானோர் செய்திருந்தனர்.