திருவொற்றியூர்; திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலின் மைய சன்னிதியில்,வட்டபாறை அம்மன் வடக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். ஆண்டுதோறும், சித்திரை மாதத்தில் ஏழு நாட்கள் வட்டபாறை அம்மன் உத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, 20ம் தேதி இரவு உத்சவம் துவங்கியது. உத்சவ தாயார், பவழக்கால் விமானம், கந்தர்வ விமானம், புஷ்ப விமானம், அஸ்தமானகிரி விமானம், சவுடால் விமானம், புஷ்ப பல்லக்கு உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி, மாடவீதியில் உலா வந்தார். நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு, கதம்ப பூ மாலை அணிந்து, வட்டபாறை அம்மன் உத்சவ தாயார், இந்திர விமானத்தில் எழுந்தருளி மாடவீதி உலா வந்தார். தொடர்ந்து, கொடியிறக்கம் நடந்தது. மற்றொரு உத்சவமான, தியாகராஜ சுவாமி அமாவாசை உத்சவம், நேற்று அதிகாலை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தொட்டியில், தியாகராஜ சுவாமி எழுந்தருளினார். பின், கோவில் வெளியே எழுந்தருளிய சுவாமி, 16 கால் மண்டபத்தை வலம் வந்து நிலையை அடைந்தார். இதற்கான ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் நற்சோணை தலைமையில் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.