பதிவு செய்த நாள்
30
ஏப்
2025
08:04
திருத்தணி; வைகாசி, ஐப்பசி மாதங்களை போல் முருக பெருமானை வழிபடுவதற்கு சிறப்பான மாதமாக, சித்திரை மாதம் உள்ளது. இந்த மாதத்தில் வரும் கிருத்திகையில், முருக பெருமானுக்கு பக்தர்கள் விரதம் இருந்து வழிபடுகின்றனர். திருத்தணி முருகன் கோவிலில், நேற்று சித்திரை மாத கிருத்திகை விழாவை ஒட்டி, அதிகாலை 5:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்ககிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 9:30 மணிக்கு, உற்சவர் முருகப்பெருமானுக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, தேர்வீதியில் ஒருமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும், சில பக்தர்கள் மயில், மலர் காவடிகளுடன் வந்து மூலவரை வழிபட்டனர். காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர்வீதியில் குவிந்தனர். இதனால், பொது தரிசனத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நான்கு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர்.
அதேபோல், 100 ரூபாய் தரிசன டிக்கெட்டில், இரண்டு மணி நேரம் காத்திருந்து வழிபட்டனர். குறிப்பாக, பொது தரிசனத்தில் பக்தர்கள் முண்டியடித்து மூலவரை தரிசித்தனர். இதற்கு காரணம், கோவில் நிர்வாகம் பக்தர்களை முறையாக வரிசையில் விடாமல் அலட்சியம் காட்டியதால், பக்தர்கள் கடும் அவதிப்பட்டனர். குழந்தைகளுடன் வந்த பெண் பக்தர்கள் சிலர், மூலவரை தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பொன்னேரி; பொன்னேரி, ஆண்டார்குப்பம் பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில், பெரும்பேடு முத்துகுமாரசாமி கோவில், குமரஞ்சேரி குமாரசாமி, திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் கோவிலில் உள்ள முருகன் சன்னிதி என, பல்வேறு முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. வழக்கமாக, செவ்வாய்க்கிழமைகளில் முருகன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் இருக்கும். நேற்று கிருத்திகையும் சேர்ந்து வந்ததால், பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்திக்கொண்டும் வந்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.