காரமடையில் பழமை வாய்ந்த ராமானுஜர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஏப் 2025 03:04
மேட்டுப்பாளையம்; காரமடையில் பழமைவாய்ந்த ஸ்ரீ ராமானுஜர் கோவிலில் கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. கோவை மாவட்டம் காரமடை அருகே சின்ன தொட்டிபாளையத்தில், பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராமானுஜர் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த ஏப்ரல் 28ம் தேதி மங்கள இசையுடன் விஸ்வக்சேனர் ஆராதனை, வாசுதேவ புண்யாஹவாசனம் போன்றவைகள் நடைபெற்றது. பின் 29ம் தேதி காலை இரண்டாம் கால ஹோமம் பூஜை 108 மூலிகைகளால் நடைபெற்றது. மதியம் திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை உபசார பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, நேற்று காலை 6 மணிக்கு விஸ்வரூப தரிசனம், மங்கல இசையுடன் நான்காம் கால ஹோமம் நடந்தது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கலச கூடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து காலை 10 மணிக்கு திருமங்கையாழ்வார், நம்மாழ்வார்க்கு கூரத்தாழ்வார் பூஜை நடைபெற்றது. இதில், மேல் கோட்டை திருநாராயண ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜியர், திருக்கோஷ்டியூர் மாதவன், உள்பட பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேகத்தை காரமடை அரங்கநாதர் கோவில் ஸ்தலத்தார் வேதவியாசர் பட்டர் குழுவினர் செய்தனர்.