பதிவு செய்த நாள்
01
மே
2025
04:05
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. திருக்கல்யாணம் மே 8ம் தேதியும்,தேரோட்டம் மே 9ம் தேதியும் நடைபெறுகிறது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்தாண்டிற்கான திருவிழாவிற்காக இன்று கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கும்,சுவாமிகளுக்கும் திருமஞ்சனம் நடத்தப்பட்டு சர்வ அலங்காரங்களுடன் கொடி மரத்திற்கு முன்பாக எழுந்தருளினர். இதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் ஹோமங்களை வளர்த்து கொடி மரத்திற்கும் பூஜைகளை செய்த பிறகு காலை 8:10 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்ற பின்னர் அபிஷேக, ஆராதனைகளும் நடந்தது. விழாவில் மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், போலீஸ் டி.எஸ்.பி.,நிரேஷ் மற்றும் ஏராளமான பக்தர்களும் கலந்து கொண்டனர்.விழா நடைபெறும் 10 நாட்களின் போது அம்மனும்,சுவாமியும் அன்னம்,கமலம், சிம்மம்,ரிஷபம், யானை,கிளி,குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப் படிகளுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்த பின்னர் நான்கு ரத வீதிகளின் வழியே வலம் வருவர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற மே 8ம் தேதியும்,தேரோட்டம் மே.9ம் தேதியும் நடைபெற உள்ளது.