பதிவு செய்த நாள்
01
மே
2025
04:05
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே பன்னீர்மடையில் பாலமுருகன் திருக்கோவில் மற்றும் நவகிரகங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
துடியலூர் அருகே பன்னீர்மடை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாலகணபதி திருக்கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலமுருகன் திருக்கோவில் மற்றும் நவகிரக சன்னதிகளுக்கான மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கிய விழாவில், விக்னேஸ்வர பூஜை, மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூஜைகள் நடந்தன. பின்னர், வாஸ்து பூஜை, கலசங்கள் யாகசாலைக்கு கொண்டு செல்லுதல், ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள், மூல மந்திர ஹோமம், காயத்ரி ஹோமம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், மங்கள இசையுடன் யாக சாலைகளில் இருந்து புனித நீர் அடங்கிய தீர்த்த குடங்கள், விமான கோபுரம், ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில், நவகிரகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, தீர்த்த குடங்களில் உள்ள புனித நீர் கலசங்களில் ஊற்றப்பட்டது. கும்பாபிஷேகத்தை சிவஸ்ரீ பிரவீன் குமார சிவம் மற்றும் குழுவினர் நடத்தி வைத்தனர். தொடர்ந்து, அபிஷேக பூஜைகள், அலங்கார பூஜைகள், மகா தீபாராதனைகள் நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.