பதிவு செய்த நாள்
02
மே
2025
11:05
சென்னை; திருமலை ஏழுமலையான் கோவிலில், ‘பிரேக்’ தரிசன நேரம் சோதனை அடிப்படையில், நேற்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தரிசன பரிந்துரை கடிதங்கள், இரண்டரை மாதங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில், அதிகாலை முதல் பல்வேறு தரிசன சேவைகள் உள்ளன. இதில், ‘பிரேக்’ தரிசனம் ஒரு சிறப்பு தரிசன முறை. இது, வி.ஐ.பி., பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது. இதற்கான டிக்கெட்டை, ‘ஆன்-லைன்’ வழியாகவும் நேரிலும் பெறலாம். இந்த தரிசனத்தில் ஆரத்தி, தீர்த்தம், சடாரி சேவைகளுக்கு அனுமதிக்கப்படுகிறது. ஆந்திராவில் முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற பின், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், அனைவருக்கும் தரிசனம் என்ற அடிப்படையில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பள்ளி, கல்லுாரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், திருமலை ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்களின் கூட்டத்தை கவனத்தில் கொண்டு, நேற்று முதல் ஜூன், 15 வரை தரிசனம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், வி.ஐ.பி., பிரேக் தரிசன நேரத்திலும் நேற்று முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, ‘புரோட்டோகால்’ உள்ள நீதிபதிகள், மந்திரிகள் உள்ளிட்ட உயர் பதவி வகிக்கும் வி.ஐ.பி.,க்கள் அதிகாலை, 5:45 மணிக்கும், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் காலை, 6:30 மணிக்கும், பொது, ‘பிரேக்’ தரிசனம் செல்பவர்கள் காலை 6:45 மணிக்கும் அனுமதிக்கப்படுவர். அதேபோல, ஸ்ரீவாணி தரிசன நேரமும், காலை, 10:15 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. நன்கொடையாளர்கள் காலை, 10:30 மணிக்கும், திருமலை திருப்பதி தேவஸ்தான ஓய்வு பெற்ற ஊழியர்களை கவுரவித்து காலை, 11:00 மணிக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள் வழக்கமாக செல்லும் தரிசனத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, திருப்பதி தேவஸ்தானம் புதிய நடைமுறையை நேற்று முதல் செயல்படுத்தி உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.