திருஇந்தளூர் தான்தோன்றீஸ்வரர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2025 01:05
மயிலாடுதுறை; திருஇந்தளூர் தான்தோன்றீஸ்வரர் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் மிகப்பழமை வாய்ந்த ஒப்பிலாநாயகி சமேத தான்தோன்றீஸ்வரர் கோயில் உள்ளது. கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்ட மாடக்கோயிலான இக்கோயில் சந்திரன், சப்த கன்னியர் பூஜித்த சிறப்புக்குரிய தலமாகும். மயிலாடுதுறையில் சுற்றி உள்ள சப்தஸ்தான கோயில்களில் ஒன்றான பழமை வாய்ந்த இக்கோயில் கிராம மக்கள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினரின் முயற்சியின் காரணமாக பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. விழா கடந்த புதன்கிழமை அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி காவிரி கரையிலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு, நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக தினமான இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, மகாபூர்ணாகுதி மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. பின்னர் பூஜிக்கப்பட்ட புனித நீரை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி விமான கோபுரத்தை அடைந்து, விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. பின்னர் மூலவருக்கு மகாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.