பதிவு செய்த நாள்
05
மே
2025
11:05
திருப்பூர்; அக்னி நட்சத்திரம் துவங்கியதால், திருப்பூர் பகுதி சிவாலயங்களில், நேற்று முதல் தாராபிஷேகம் துவங்கியது. கோடைக்காலத்தில், வெயில் உச்சகட்டத்தை எட்டும் காலம் அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது. சித்திரை மாதத்தின் கடைசி இரு வாரங்களும்; வைகாசி மாதத்தின் முதலிரு மாதங்களும் அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது. இந்நாட்களில், வெயில் அதிகம் இருக்கும் என்பதால், உச்சி வெயில் நேரத்தில் வெளியே வராமல் இருக்க வேண்டும். அக்னி நட்சத்திர காலத்தில், சிவன் கோவில்களில், சிவபெருமானுக்கு, தாராபிேஷகம் நடத்தப்படுகிறது. கோவில் கருவறையில், லிங்கதிருமேனிக்கு மேல், செம்பு உலோகத்தில் தயாரிக்கப்பட்ட தாரா பாத்திரம் கட்டி வைக்கப்படும். அதில், தீர்த்தம், பன்னீர், வெட்டிவேர், பச்சை கற்பூரம், கடுக்காய் உள்ளிட்ட மூலிகை பொருட்கள் கலக்கப்படும். மேற்புரம் வாய் அகன்று, கீழ்ப்புறம் கூம்பாக வந்து, சிறு துவாரம் இருக்கும். இதுவே தாராபாத்திரம். இதில், தண்ணீர் நிரப்பி வைத்தால், சிவலிங்கம் மீது, 15 முதல் 20 வினாடிகள் வரை ஒரு சொட்டு விழுவது போல் பொருத்தப்படும். இதுவே, தாராபிஷேகம்; இது, அக்னி நட்சத்திரம் நிறைவடையும் நாள் வரை தொடரும். திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர்; நல்லுார், ஸ்ரீவிஸ்வேஸ்வரர்; ஊத்துக்குளி ரோடு, காசி விஸ்வநாதர்; அலகுமலை, ஆதி கைலாசநாதர் உள்ளிட்ட சிவாலயங்களில் தாராபிஷேகம் நேற்று துவங்கி, 28 ம் தேதி இரவு வரை தொடரும் என்றும் சிவாச்சாரியார்கள் தெரிவித்துள்ளனர்.
பக்தர்கள் நம்பிக்கை; கோடை வெப்பத்தால், உலகில் உள்ள ஜீவராசிகள் கடுமையான சிரமத்தை சந்திக்கின்றன. சிவபெருமானை தாராபிஷேகத்தால் குளிர்விக்கும் போது, கோடை மழை பெய்து, பூமியும் குளர்விக்கப்படும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை.