ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18ல் சபரிமலை வருகை; தயாராகிறது தேவசம்போர்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2025 03:05
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் 18 அல்லது 19 தேதியில் சபரிமலை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து திருவிதாங்கூர் தேவசம்போர்டு பக்தர்களின் தரிசனம் முன்பதிவு நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும் 14ம் தேதி மாலை திறக்கிறது. 15 முதல் 19ம் தேதி வரை ஐந்து நாட்கள் பூஜைகள் நடைபெறும். இந்நிலையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு சுவாமி தரிசனம் செய்வதற்காக வரும் 18 அல்லது 19ஆம் தேதியில் சபரிமலை வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அதிகார பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை என்றாலும் அவர் கேரளாவில் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் விமானத்தில் வரும் அவர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் நிலக்கல் சென்று அங்கிருந்து கார் மூலம் பம்பைக்கு செல்கிறார். அங்கிருந்து கால்நடையாகவோ அல்லது டோலி மூலமாகவோ அவர் சன்னிதானம் செல்ல வாய்ப்புள்ளது. இந்த இடங்களை கேரளாவில் உயர் போலீஸ் அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர். பம்பை வரை உள்ள ரோடுகளுக்கான பராமரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தங்குவதற்காக சன்னிதானம் விருந்தினர் மாளிகையில் கூடுதல் வசதிகளுடன் அறைகள் தயாராகிறது. இதை தொடர்ந்து 18 மற்றும் 19 தேதிகளில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கான ஆன்லைன் முன் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திரவுபதி முர்மு சபரிமலை வரும் பட்சத்தில் இங்கு வந்த முதல் குடியரசு தலைவர் என்ற பெருமையை அவர் பெறுவார்.