பதிவு செய்த நாள்
06
மே
2025
11:05
செஞ்சி; செஞ்சி கோட்டை கமலக்கண்ணியம்மன் கோவில் தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
செஞ்சி ராஜகிரி கோட்டையில் உள்ள கமலக்கண்ணியம்மன் கோவில் பாரம்பரிய தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று காலை கமலக்கண்ணியம்மன், ராஜகாளியம்மன், பீரங்கிமேடு மகா மாரியம்மன், கோட்டை வீரப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடு நடந்தது. காலை 9:00 மணிக்கு மகா மாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகம், கொடி மரத்திற்கு கலசாபிஷேகமும் செய்தனர். 10:00 மணிக்கு கொடியேற்றமும், மகா தீபாராதனை நடந்தது. இதில் கமலக்கண்ணியம்மன் கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் மற்றும் உபயதாரர்கள், விழா குழுவினர் கலந்து கொண்டனர். விழா நாட்களில் அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், இரவு சாமி வீதி உலா, வாண வேடிக்கை, மேடை நாடகம், இன்னிசை கச்சேரி, தெருகூத்து நடக்க உள்ளது. இம்மாதம் 13ம் தேதி காலை 6:00 மணிக்கு பால் குடம் ஊர்வலம், மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தலும், மாலை 2.30 மணிக்கு திருத்தேர் திருவிழா நடக்க உள்ளது.
அனுமதி இலவசம்; கமலக்கண்ணியம்மன் செஞ்சி கோட்டை ராஜகிரி கோட்டையில் பாதி அளவு மலையில் உள்ளது. பல நுாற்றாண்டு பாரம்பரிய விழா என்பதால் ஆங்கிலேயர் ஆட்சியின் போதே விழா நாட்களில் பொது மக்கள் ராஜகிரி கோட்டைக்குள் சென்று வர இலவச அனுமதி வழங்கி வந்தனர். இதே போல் இந்த ஆண்டும் நேற்று முதல் 14ம் தேதி வரை பொது மக்கள் ராஜகிரி கோட்டைக்குள் சென்று வர இந்திய தொல்லியல் துறையினர் இலவச அனுமதி வழங்கி உள்ளனர்.