காரைக்காலில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதன் மூலம், சனி பகவானால் ஏற்பட்ட துன்பங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். ஏழரை சனி, கண்ட சனி உள்ளிட்ட சனி பெயர்ச்சிகளின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். இதனால் திருநள்ளாறு கோவிலுக்கு பக்தர்கள் வருகை எப்போதும் அதிகமாகவே இருக்கும்.
பெங்களூரிலும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் போன்று, ஒரு கோவில் உள்ளது. இந்த கோவில் ஜெயமஹால் சாலை நந்திதுர்கா ரோடு எக்ஸ்டென்ஷன் 1வது மெயின் ரோட்டில் அமைந்து உள்ளது. சனியின் பிடியில் இருந்து தப்பிக்க நினைக்கும் மக்கள் இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர். சனி தோஷத்தின் எதிர்மறையாக தாக்கத்தில் இருந்து விடுபட நினைக்கும் பக்தர்கள்,
கோவிலுக்கு சென்று நள தீர்த்தத்தில் குளிப்பது போன்ற சடங்குகளை செய்கின்றனர். கோவிலில் மூலவராக தர்பாரண்யேஸ்வரர் உள்ளார். ஒரு புராண கதை இக்கோவிலை நள மன்னருடன் தொடர்புபடுத்துகிறது. நள மன்னர் இந்த கோவிலுக்கு வந்து சனி பகவானை தரிசனம் செய்த பிறகு தான், சனியின் பிடியில் இருந்து விடுபட்டதாக வரலாறுகள் கூறுகின்றன.
கோவிலில் சனீஸ்வரன், சிவன் மற்றும் பிற தெய்வங்களுக்காக தனித்தனி சன்னிதிகள் உள்ளன. மஹா சிவராத்திரி, சனிபெயர்ச்சி கோவிலில் நடக்கும் முக்கிய விழாக்கள் ஆகும். திருநள்ளாறு செல்ல முடியாதவர்கள், இங்கு சாமி தரிசனம் செய்வதால் சனியின் பிடி தங்களை விட்டு நீக்குகிறது என்று நம்புகின்றனர். தினமும் காலை 6:00 மணி முதல் காலை 8:00 மணி வரையும்; மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும். சனிக்கிழமை அன்று பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது.