பதிவு செய்த நாள்
06
மே
2025
11:05
ஜெகந்நாத் கோவில் என்றால், அனைவரும் ஒடிசா மாநிலம் பூரிக்கு தான் செல்வர். ஆனால் அதே ஆன்மிகம், கலாசாரத்தை பரப்பும் வகையில், பெங்களூரிலும் ஜெகந்நாத் கோவில் கட்டப்பட்டுள்ளது.
ஆம், பெங்களூரு ஹெச்.எஸ்.ஆர்., லே – அவுட் அகராவில், ஒடிசா மாநிலத்தில் உள்ளது போன்றே ஜெகந்நாத் கோவில் கட்டப்பட்டு உள்ளது. ‘குட்டி இந்தியா’ என்று அழைக்கப்படும் பெங்களூரில் ஒடிசா மாநில மக்களும் வசித்து வருகின்றனர். பெங்களூரில் ஒடிய மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. தங்கள் மாநிலத்தில் பூரி ஜெகந்நாத் கோவில் போன்றே பெங்களூரில் கட்ட அவர்கள் முடிவு செய்தனர். ஒடிசா கலாசார சங்கம் சார்பில் 2009ல் இக்கோவில் கட்டப்பட்டது.
இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒடிய மக்கள் மட்டுமின்றி, அனைத்து மொழியினர், சுற்றுலா பயணியர் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். காலிங்கா கட்டடக் கலையில் பிரதிபலிக்கும் இக்கோவிலின் கோபுரம், மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பூரியில் உள்ளது போன்றே, ஜெகந்நாதர், பாலபத்ரர், தேவி சுபத்ரா விக்ரஹங்கள், மரத்தால் செய்யப்பட்டுள்ளன. தினமும் பூஜைகள், ஆரத்திகள், பிரசாதங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
கோவிலை சுற்றிலும் பசுமை போர்த்தியபடி காட்சி அளிக்கிறது. தரிசனம் செய்யவும், தியானம் செய்யவும் மிகவும் ஏற்ற இடம். பூரியை போன்றே, ஜெகந்நாதர், பாலபத்ரர், தேவி சுபத்திரை ஆகியோர் ரதத்தில் வைக்கப்பட்டு, ஊர்வலம் நடக்கிறது.
தினமும் காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரை; மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை கோவில் திறந்திருக்கும். காலை 6:30 மணிக்கு மங்களாரத்தி, மதியம் 12:00 மணிக்கு பிரசாதம் வழங்கல்; இரவு 7:30 மணிக்கு சந்தியா ஆரத்தி காண்பிக்கப்படுகிறது.
ஜெகந்நாதர், பாலபத்ரர், தேவி சுபத்ரா
பிரசாதத்துக்கு முன்பதிவு: கோவில் பிரசாதம் வேண்டும் என்றால், காலை 10:00 மணிக்கு முன்பாக, 88614 34010 என்ற மொபைல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.இதனால் வெளியூர்களில் இருந்து வருவோர், கடைசி நேரத்தில் பிரசாதம் கிடைக்காமல் ஏமாந்துபோவதை தவிர்க்கலாம். பூரியில் வழங்குவது போன்றே இங்கும் பிரசாதம் வழங்கப்படும்.
எப்படி செல்வது: கார், ஆட்டோவில் செல்வோர் கூகுள் மேப்பில் ‘ஜெகந்நாத் கோவில், அகரா’ என்று டைப் செய்தால், கோவில் அருகில் இறங்கலாம் மெஜஸ்டிக், கே.ஆர்., மார்க்கெட், சில்க்போர்ட், எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து பஸ்சில் செல்வோர், அகரா பஸ் நிறுத்தத்தில் இறங்கி, ஐந்து நிமிடம் நடந்து கோவிலை அடையலாம்.