பதிவு செய்த நாள்
06
மே
2025
11:05
கோவிலுக்குள் சென்று சாமியை தரிசிக்க முடியாதவர்கள், கோவிலுக்கு வெளியே நின்று கோபுரத்தை தரிசனம் செய்வர். கோபுரத்தை தரிசனம் செய்வது பாவங்களை போக்கி, மனதை துாய்மைப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. மனதை அமைதிப்படுத்தி நல்லெண்ணங்களை வளர்க்கவும், உடல்நலத்தை மேம்படுத்தவும் கோபுர தரிசனம் உதவுகிறது என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
கோவிலில் வைத்து திருமணம் செய்பவர்கள், தங்கள் வாழ்க்கை நல்லபடியாக இருக்க வேண்டும் என்று கோபுர தரிசனம் செய்வதையும் நாம் பார்த்து இருப்போம். பெங்களூரில், 108 அடி உயர கோபுரம் கொண்ட ஒரு கோவில் உள்ளது. அந்த கோவிலை பற்றிப் பார்க்கலாம்.
பெங்களூரின் பனசங்கரி 2வது ஸ்டேஜ் சித்தன்னா லே – அவுட் தேவகிரி பகுதியில், வரபிரதா ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவில் ஹிந்து கடவுள் விஷ்ணுவின் ஒரு வடிவமான, வெங்கடேஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. கோவிலின் கட்டடக்கலை திராவிடர் கட்டடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. முக்கிய தெய்வமாக வெங்கடேஸ்வரர் உள்ளார்.
அவருக்கு இடதுபுறத்தில் விநாயகர் இருக்கிறார். வலதுபுறத்தில் பார்வதி, ஆண்டாள் தெய்வங்களின் கருவறை உள்ளது. தவிர ராமர், சீதா, லட்சுமணர் சிலைகளும், சிவன், லட்சுமி, நரசிம்மர், சரஸ்வதி, லட்சுமி தெய்வங்களின் சிலைகளும் உள்ளது. ஹிந்து புராண காட்சிகளை சித்திரிக்கும் சிக்கலான சிற்பங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன. கோவிலின் கோபுரம் 108 அடி உயரம் கொண்டது. துாரத்தில் இருந்தும் கோபுர தரிசனம் செய்யலாம்.
வைகுண்ட ஏகாதசி, பிரம்ம உற்சவம், ரத உற்சவம் உட்பட பல விழாக்கள் இக்கோவிலில் கொண்டாடப்பட்டு வருகிறது. இக்கோவில் ஆண்டு முழுவதும் திறந்திருக்கும். கோவிலின் அமைதியான சூழல் பக்தர்கள் பிரார்த்தனைக்கு ஏற்ற இடமாக உள்ளது. கோவிலின் புனிதத்தை பராமரிக்கும் வகையில், ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
கோவிலின் நடை தினமும் காலை 8:30 மணி முதல் மதியம் 12:00 மணி வரையும்; மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரையும் திறந்திருக்கும். கோவில் முன்பு வாகனங்களை நிறுத்தவும் வசதி உள்ளது. மெஜஸ்டிக்கில் இருந்து பனசங்கரிக்கு அடிக்கடி பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயிலில் செல்பவர்கள் பனசங்கரி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ மூலம் கோவிலை சென்று அடையலாம்.