பதிவு செய்த நாள்
08
மே
2025
10:05
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று (8ம் தேதி) கோலாகலமாக நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. இன்று காலை 8:35 மணி முதல் 8:59 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் வேத மந்திரங்கள் ஒலிக்க சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி மதுரை நகர் விழாக் கோலம் பூண்டுள்ளது. மீனாட்சி திருக்கல்யாண வைபோகத்தில் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் திரளாக கலந்து கொண்டனர்.
மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோயில் பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நேற்று இரவு 11:00 மணி முதல் மதுரை ஆவணி மூல வீதிகளில் வாகனங்கள் செல்லவோ, பார்க்கிங் செய்யவோ அனுமதி இல்லை. அனுமதி சீட்டுடன் வரும் வாகனங்கள் இன்று காலை 6:00 மணி முதல் அனுமதிக்கப்படும். * மஞ்சள் நிற அனுமதி சீட்டு உள்ளவர்களின் வாகனங்கள் மேல ஆவணி மூல வீதியில் நிறுத்த வேண்டும். இதற்காக வடக்கு - மேலமாசிவீதி சந்திப்பு, வடுககாவல் கூடத்தெரு, தானப்ப முதலி தெரு வழியாக வரவேண்டும். திருக்கல்யாணம் முடிந்ததும் பண்டு ஆபீஸ், ஜான்சிராணி பூங்கா, நேதாஜி ரோடு வழியாக வெளியேற வேண்டும்.
தேரோட்டம்; மே 9 தேரோட்டத்தை முன்னிட்டு இன்று இரவு 10:00 மணி முதல் மாசி வீதிகளில் எந்த வாகனமும் நிறுத்தக்கூடாது. தேரோட்டத்தை காண வருவோர் தங்கள் வாகனங்களை மாரட்வீதிகளில் நிறுத்த வேண்டும்.