அச்சிறுபாக்கம்; அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில், சித்திரை பிரமோத்சவ தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளி அம்மன் சமேத ஆட்சீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவின் ஏழாவது நாள் தேர் திருவிழா, நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு மங்கல இசையுடன் விழா துவங்கியது. விநாயகர், ஆட்சீஸ்வரர், இளங்கிளி அம்மன், அம்பாள், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவ மூர்த்திகளான இளங்கிளி அம்மன் சமேத ஆட்சீஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளினர். காலை 9:00 மணிக்கு மேல் காலை 10:00 மணிக்குள், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கலெக்டர் அருண்ராஜ், மதுராந்தகம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் மேகலா மற்றும் பொதுமக்கள் திருத்தேரின் வடம் பிடித்து, துவக்கி வைத்தனர். கோவிலின் நான்கு மாட வீதிகளிலும், தேர் வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.