வீரட்டானேஸ்வரர் கோவில் தேர் பராமரிப்பின்றி வீணாகும் அவலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2012 11:12
பண்ருட்டி:திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் திருத்தேர் பராமரிப்பு பணி நடைபெறாமல் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகி வருகிறது. பண்ருட்டி அடுத்த திருவதிகையில் 2000ம் ஆண்டு கால பழமைவாய்ந்த அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலின் மூலவர் வீரட்டானேஸ்வரர் திருத்தேரின் மூலம் மூன்று அசுரர்களை வதம் செய்ததாக வரலாறு கூறுகிறது. இதன் காரணமாக கோவிலின் மூலவர் கோபுரம் தேர் வடிவில் கணித சாஸ்திரப்படி மூலவர் கோபுர கலசம் நிழல் விழாதபடி கட்டப்பட்டது. இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரமோற்சவம் உற்சவத்தில் திருத்தேர் ஊர்வலம் நடைபெறும். திருத்தேர் பராமிப்பின்றி இருந்ததால் கடந்த 10 ஆண்டுகளாக தேர் உற்சவம் நடைபெற வில்லை. அதனைத் தொடர்ந்து திருத்தேர் பணியை கடந்த 2008ம் ஆண்டு ஒப்பந்ததாரர் மூலம் ஏலம் விடப்பட்டும் தேர் புதுப்பிக்கும் பணி துவங்கவில்லை. மறுடெண்டர் கோரப்பட்டு கள்ளக்குறிச்சி மகேஸ்வரன் 8.25 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்க டெண்டர் எடுத்து கடந்த 2011 ஜனவரி மாதம் பணி துவங்கி 10 நாட்கள் 100 கால் மண்டபத்தில் நடந்தது. முதலில் தேரின் மேல்கூண்டு அகற்றி இலுப்ப எண்ணெய் தேய்த்து கறுப்பு கலராக இருந்த தேர் மரபாகங்கள் காஸ்டோன் சோடா கரைப்பு நீர் மூலம் மரத்தின் உண்மையான கலர் வரும் வரை தேய்த்தனர். பின்னர், ஸ்தபதி பணியைத் தொடர்ந்து செய்வதற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு மற்றும் போதிய வசதிகள் செய்யவில்லை எனக்கூறி பணியை நிறுத்தி விட்டார். தேரின் மேல் போடப்பட்ட கீற்றுக் கொட்டகை சேதமாகி தற்போது மீண்டும் தேர் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகி வருகிறது. தேர் பணியை துவங்கி முற்றிலும் முடிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.