பதிவு செய்த நாள்
13
மே
2025
05:05
மூலம்
நீதி, நேர்மை, நியாயம், பாவம், புண்ணியம் என்று வாழ்ந்துவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் மிக, மிக யோகமான மாதம். ஒருவர் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த ஒரு நொடியே போதும். நீங்கள் எதிர்பார்த்தவற்றை அடையும் மாதமாக இருக்கும். இதுவரை உங்களுக்கிருந்த நெருக்கடி இனி இல்லாமல் போகும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் வெற்றியாகும். நினைத்த வேலை நடக்கும். குடும்பம், தொழில், உத்யோகத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். வரவேண்டிய பணம் வரும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். புதிய பொறுப்பு, பதவி கிடைக்கும். தொண்டர்கள் பலம் கூடும். புதிய இடம், வீடு, வாகனம் என்று வசதி வாய்ப்பு உண்டாகும். திருமண வயதினருக்கு தகுதியான வரன் வரும். கூட்டுத் தொழில் முன்னேற்றம் அடையும். நண்பர்களால் அனுகூலம் லாபம் ஏற்படும். வாழ்க்கைத் துணையை இழந்தவர்களுக்கும், பிரிந்தவர்களுக்கும் மறுமணத்திற்குரிய வாய்ப்பு உருவாகும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எடுத்த வேலையை முடித்து விடக்கூடிய திறமை உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். மாதத்தின் பிற்பகுதியில் விவசாயிகள் நிலை உயரும். வேலைக்காக முயற்சித்தவர்களுக்கு வேலைக்குரிய தகவல் வரும்.
சந்திராஷ்டமம்: மே 30, 31.
அதிர்ஷ்ட நாள்: மே 16, 21, 25. ஜூன் 3, 7, 12.
பரிகாரம்: மணக்குள விநாயகரை வழிபட முயற்சி வெற்றியாகும்.
பூராடம்
எத்தனைப் போராட்டம் வந்தாலும் அதற்காக சோர்ந்து போகாமல் வெற்றியை நோக்கி நடைபோட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் முன்னேற்றமான மாதம். சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் ராசியைப் பார்ப்பதால் இதுநாள் வரை உங்களுக்கு இருந்த சங்கடம் விலகும். ஏற்பட்ட அவமானம் நீங்கும். நல்ல காலம் வந்தாச்சு என உங்கள் மனம் நினைக்கும். குடும்பத்தில் முன்னேற்ற நிலை உண்டாகும். உத்யோகம் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி முடிவிற்கு வரும். எதிர்பார்த்த இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்கும். உங்களுக்குள் புதிய தைரியம் வந்ததுபோல் உங்கள் செயல் இருக்கும். மனபயமும் தயக்கமும் இருந்த இடம் தெரியாமல் போகும். நீங்கள் நினைப்பது எல்லாம் நடக்கும். சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகுவும் சனியும் போட்டிப்போட்டு உங்களுக்குப் பலன்களை வழங்கிட இருப்பதால் எந்த அளவிற்கு முயற்சிகளை மேற்கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு இக்காலத்தில் உங்களுக்கு லாபம் ஏற்படும். லாப ஸ்தானத்திற்கு குரு பகவானின் பார்வை ஏற்படுவதால் பணவரவு அதிகரிக்கும். கடன் தொல்லை முடிவிற்கு வரும். வியாபாரம் தொழில் முன்னேற்றம் அடையும். புதிய முயற்சியில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் சூரியன் உங்களை முன்னேற்றப் பாதையில் நடைபோட வைப்பார். பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர்களின் செல்வாக்கு உயரும். புதிய பதவி, பொறுப்பு தேடிவரும். உடல் நிலையில் இருந்த பாதிப்பு விலகும். எதிரிகளின் நடவடிக்கைகளாலும், மறைமுகத் தொல்லைகளாலும் அவதிப்பட்டு வந்த நிலை மாறும். இழுபறியாக இருந்த வழக்கு சாதகமாகும். அரசு வழி முயற்சி வெற்றியாகும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். திருமண வயதினருக்கு வரன் வரும். இக்காலம் உங்களுக்கு மிக யோகமான காலம்.
சந்திராஷ்டமம்: மே 31. ஜூன் 1.
அதிர்ஷ்ட நாள்: மே 15, 21, 24, 30. ஜூன் 3, 6, 12.
பரிகாரம்: மீனாட்சி அம்மனை வழிபட மனம் தெளிவடையும்.
உத்திராடம் 1 ம் பாதம்
முன்னேற்றத்தை நோக்கி நடைபோட்டுவரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் அதிர்ஷ்டமான மாதம். 6 ம் இடத்தில் சஞ்சரிக்கும் பாக்யாதிபதி சூரியன் இதுவரை நீங்கள் அனுபவித்த சங்கடங்களில் இருந்து உங்களை மீட்டெடுப்பார். உங்கள் திறமையை அதிகரிப்பார். செல்வாக்கை உயர்த்துவார். அரசு வழியில் எதிர்பார்த்த அனுமதிகளை கிடைக்க வைப்பார். இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றியை அளிப்பார். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு, மேல் அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் ஏற்பட்ட நெருக்கடிகளை இல்லாமல் செய்வார். தடைபட்ட பதவி உயர்வு, இடமாற்றம் கிடைத்து முன்னேற்றம் அடைவீர்கள். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். மாதம் முழுவதும் சுக்கிரனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். கணவன் மனைவிக்குள் இணக்கமான நிலை உண்டாகும். சப்தமாதிபதி புதன் மே 16 முதல் ஜூன் 2 வரை சாதகமாக சஞ்சரிப்பதால் நேற்று தள்ளிப் போன முயற்சிகள் இப்போது வெற்றியாகும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். மூன்றாம் இட சனியும் ராகுவும் உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வர். நீங்கள் மேற்கோள்ளும் வேலைகளில் லாபத்தை ஏற்படுத்துவர். இந்த மாதம் உங்களுக்கு மிகப்பெரிய யோகமான மாதமாக இருக்கும். கடந்த கால நெருக்கடி, போராட்டம் எல்லாம் நீங்கி எதிர்காலத்திற்கு தேவையானவற்றை அடையக்கூடிய நிலை இந்த மாதத்தில் ஏற்படும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 1.
அதிர்ஷ்ட நாள்: மே 19, 21, 28, 30. ஜூன் 3, 10, 12.
பரிகாரம்: ராமநாத சுவாமியை வழிபட வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.