பதிவு செய்த நாள்
13
மே
2025
05:05
உத்திராடம் 2, 3, 4 ம் பாதம்
தன் முன்னேற்றத்தில் உறுதியாக இருக்கும் உங்களுக்கு பிறக்கும் வைகாசி மாதம் யோசித்து செயல்பட வேண்டிய மாதம். இதுவரை எல்லாமே நன்றாக போனது! இனி எப்படி இருக்கும்? என்ற கேள்வி இப்போது உங்கள் மனதில் இருக்கும். கிரகங்கள் ஒரு நேரத்தில் ஒருவருக்கு யோகமான பலன்களையும் அதன் பிறகு அதில் மாற்றங்களையும் வழங்குவர். எதிலும் நிலையானது அல்ல என்பதற்கு கிரகங்களே காரணம். வாழ்க்கையை நாம் உணர்வதற்கு நமக்கேற்படும் பிரச்னைகள் தான் அடிப்படையாக இருக்கிறது. அந்த ரீதியில் இந்த மாதத்தில் சூரியன் ஐந்தாம் இடத்தில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஏதேனும் குழப்பம். மனதில் இனம் புரியாத பயம். பிள்ளைகளால் தொல்லை. பூர்வீக சொத்தில் பிரச்னை. உடல் நிலையில் பாதிப்பு. வியாபாரத்தில் நெருக்கடி என்று ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். இதனால் எளிதாக நடந்து வந்த வேலைகள் கூட இப்போது இழுபறியாகும். ஒவ்வொரு வேலையையும் போராடி முடிக்க வேண்டிய நிலை உண்டாகும். உத்யோகத்திலும் உழைப்பு அதிகரிக்கும். மனதில் நிம்மதி என்பது இல்லாமல் போகும் என்றாலும், மாதம் முழுவதும் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்க்கை நகரும். செலவிற்கு தேவையான வருவாய் வந்து கொண்டிருக்கும். உறவினர்கள் உதவி கிடைக்கும். ஜூன் 2 முதல் புதன் சாதகமாக சஞ்சரிப்பதால் பாதகமான நேரத்திலும் சாதகமான பலன்களை அடைவதுபோல் நினைத்த வேலை நடக்கும். புதிய இடம், வீடு வாங்க மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். தொழிலை விரிவு செய்வதற்காக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஒரு சிலருக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அக்கறை கூடும். வாழ்க்கைத் துணையையும் நண்பர்களையும் அனுசரித்துச் செல்வது இக்காலத்திற்கு நல்லது. ஒரு நேரம் இருப்பதுபோல் மறுநேரம் உடல்நிலை இருக்காது என்பதால் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 1, 2.
அதிர்ஷ்ட நாள்: மே 17, 19, 26, 28. ஜூன் 8, 10.
பரிகாரம்: நெல்லையப்பரை வழிபட நன்மை உண்டாகும்.
திருவோணம்
நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள்போல் வாழ்க்கைக்குள்ள இரண்டு பக்கங்களையும் அறிந்து முன்னேற்றப் பாதையில் நடைபோட்டு வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் போராட்டமான மாதமாகும். ஒவ்வொரு வேலையையும் சிரமப்பட்டு முடிக்க வேண்டியதாக இருக்கும். தேவையற்ற நெருக்கடி, வீண் பிரச்னை, எதிர்பாராத சங்கடம் என உங்களை வாட்டி வதைக்கும். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு எதிர்ப்புகளை கொண்டு வருவார். குடும்பத்திற்குள் நிம்மதியற்ற நிலை இருக்கும். ஒருசிலர் தவறான வழியில் சென்று சட்ட சிக்கல்களுக்கு ஆளாக வேண்டிவரும். அஷ்டம ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் உடல் நிலையில் ஒன்றுவிட்டு ஒன்று என்று ஏதேனும் ஒரு பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். ஒரு சிலருக்கு எதிர்ப்பாலினரால் அவமானம் ஏற்படும். ஜூன் 8 முதல் செவ்வாயும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் விழிப்புடன் செயல்படுவது அவசியம். உங்கள் வேலை உங்கள் குடும்பம் என்ற எண்ணத்துடன் நாட்களை நகர்த்த வேண்டும். வீண் பிரச்னை எதிலும் தலையிடாமல் இருப்பது நல்லது. இக்காலத்தில் யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். வார்த்தைகளாலும் கோபத்தைக் காட்ட வேண்டாம், அது நீடிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. தனியார் நிறுவன ஊழியர்கள் உடன் பணிபுரிபவர்களையும், நிர்வாகத்தையும் அனுசரித்துச் செல்வது அவசியம். குடும்பத்தினர் ஆலோசனை இக்காலத்தில் உங்களைப் பாதுகாக்கும். புதிய நட்புகளால் வாழ்க்கை திசை மாறும். 6 ம் இட குருவால் மனம் சங்கடப்படும் நிலை உண்டாகும். குருவின் பார்வை ஜீவன, குடும்ப ஸ்தானங்களுக்கு உண்டாவதால் வியாபாரம் முன்னேற்றம் அடையும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். ஜூன் 2 முதல் புதனின் சஞ்சாரம் நன்மைகளை ஏற்படுத்தும். பொருளாதார நெருக்கடி நீங்கும். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். நிலைமையை சமாளிக்கும் அளவிற்கு பண வரவு இருக்கும். அரசியல்வாதிகள் இக்காலத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் பதவியை இழக்க வேண்டிய நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். பொதுவெளியில் அவமானத்தையும் சந்திக்க வேண்டியதாக இருக்கும். மாணவர்கள் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
சந்திராஷ்டமம்: ஜூன் 2, 3.
அதிர்ஷ்ட நாள்: மே 17, 20, 26, 29. ஜூன் 8, 11.
பரிகாரம்: காளத்தீஸ்வரரை வழிபட சங்கடங்கள் விலகும்.
அவிட்டம் 1, 2 ம் பாதம்
துணிச்சலுடன் செயல்பட்டு நினைத்ததை சாதித்து வரும் உங்களுக்கு, பிறக்கும் வைகாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். உங்கள் நட்சத்திராதிபதி செவ்வாய் ஜூன் 8 வரை சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பிரச்னைகளை சந்திக்க வேண்டிவரும். அவர் நீச்சமாக இருப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதுபோல் உங்கள் கௌரவம் காக்கப்படும். அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவுடன் ஜூன் 8 முதல் செவ்வாய் இணைவதால் உடல்நிலையில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். ஒரு சிலர் விபத்தையும் சந்திக்க நேரும் என்பதால், இக்காலத்தில் அனைத்திலும் நிதானமாக இருப்பது அவசியம். தன குடும்ப வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்துவார். வார்த்தைகளால் பிரச்னைகளையும் எதிர்ப்புகளையும் உருவாக்குவார். பண வரவில் தடைகளை ஏற்படுத்துவார். கிரக சஞ்சாரங்கள் இந்த நேரத்தில் உங்கள் உடல் நிலையை மையப் படுத்துவதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். பரம்பரை நோய், தொற்றுநோய் என்று ஒரு சிலருக்கு பாதிப்பினை அதிகரிக்கலாம். ஒருசிலர் அவமானங்களுக்கும் ஆளாக நேரும். எதையும் செய்ய முடியாத அளவிற்கு சூழ்நிலை உங்களுக்கு எதிராக மாறும். இந்த நேரத்தில் எதிரிகளின் கை ஓங்கும் என்பதால் உத்யோகத்தில் இருப்பவர்கள் அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. பணியாளர்களும் தாம் உண்டு தம் வேலை உண்டு என கவனம் செலுத்துவது நல்லது. ஒரு சிலர் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதிக வட்டிக்கு கடன் வாங்கி அவதிப்பட வேண்டிய நிலையும் ஏற்படும். ஜூன் 2 முதல் உங்களுக்கு ஓரளவிற்கு பாதுகாப்பு உண்டாகும். வருமானம் வரும். நினைத்தது நடக்கும். பிரச்னை இல்லாத அளவிற்கு வாழ்க்கை இருக்கும். நோய் நொடிகளில் இருந்து விடுதலைக் கிடைக்கும். மருத்துவச் செலவு குறையும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. இருபாலரும் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வதால் என்ன வந்தாலும் சமாளிக்க முடியும்.
சந்திராஷ்டமம்: ஜூன் 4
அதிர்ஷ்ட நாள்: மே 17, 18, 26, 27. ஜூன் 8, 9.
பரிகாரம்: செந்தில் வேலனை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.