பதிவு செய்த நாள்
14
மே
2025
03:05
உடுமலை; உடுமலை அருகே, அமராவதி ஆற்றங்கரையில் பழங்காலத்தில், குடியிருப்புகள் இருந்ததை உணர்த்தும், பழமையான கற்சிற்பத்தை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆய்வு செய்து ஆவணப்படுத்தினர்.
உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உருவாகி, கரூரில் காவிரியுடன் கலக்கும் அமராவதி ஆற்றங்கரையில், முற்காலத்திலேயே வேளாண்மையும், வணிகமும் சிறப்புற இருந்துள்ளது. காலப்போக்கில், கரைவழி நாகரீகம் மாற்றமாகி, தொன்மையான வரலாற்று சின்னங்கள் பராமரிப்பின்றி மறைய துவங்கின. கரைவழியில் செழித்திருந்த நாகரீகம் குறித்தும் வரலாற்று சின்னங்களை கண்டறிந்து ஆவணப்படுத்தும் பணியில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், குமரலிங்கத்திற்கு தெற்கே அமராவதி ஆற்றின் இடது கரையில் இரண்டரை அடி உயரம் உள்ள கற்சிற்பம் குறித்து கள ஆய்வு செய்து ஆவணப்படுத்தி உள்ளனர். தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி கூறியதாவது: அமராவதி ஆற்றின் கரைகளில் மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகளும் சிறப்பு வாய்ந்த கோவில்கள் இருந்தமைக்கான சான்றுகள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. குமரலிங்கம் அருகே, அமராவதி ஆற்றின்தெற்கு கரையில் காணப்படும், இந்த கற்சிற்பம் நல்ல ஆபரணங்கள் அணிந்து, வலது கையில் ஆயுதமும், இடது கையில் தண்டம் போன்ற உருவம் பொறித்ததையும் காண முடிகிறது. மேலும் வீரனின் இடுப்பில் குறுவாள் அற்புதமாக சிலையாக வடிக்கப்பட்டுள்ளது. இதனால், இச்சிலை ஒரு மன்னரின் தளபதி என்றோ, வாயிற்காவலன், போர் வீரன் என கருதலாம்.
இந்த சிற்பம் உருவம் சிறியதாக இருப்பதாலும் இதற்கு அருகில் அடர்ந்த வனங்கள் இருப்பதாலும், அமராவதி ஆற்றின் கரையில் இந்த சிற்பம் இருப்பதாலும் இவ்விடத்தில் கோவில் இருந்திருக்கலாம் என்று தெரிய வருகிறது. இது வீரிராயப்பெருமாள் , தன்னாசியப்பன் என்றும் வட்டார வழக்கில் அழைக்கப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் கரைவழியில் வாழ்ந்திருந்ததையும் குமரலிங்கம், கொழுமம், கல்லாபுரம் போன்ற பகுதிகள் ராஜராஜவழி நாடு என்று பெயர் பெற்றிருந்தது. குமரலிங்கம் கடந்த காலங்களில் குமரங்க பீம சதுர்வேதி மங்கலம் எனவும், கல்லாபுரம் விக்ரம சோழநல்லூர் என்று இருந்துள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார். கள ஆய்வில் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சிவகுமார், மற்றும் அருட்செல்வன் உடனிருந்தனர்.