பதிவு செய்த நாள்
14
மே
2025
03:05
ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ள நிலையில், பிரசித்தி பெற்ற கோயில்களில் மட்டும் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் விண்ணப்பம் வாங்கிய ஏராளமான கோயில்களில் இதுவரை அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. எப்போது நியமிக்கப்படுவார்கள் என விண்ணப்பதாரர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் 36 ஆயிரம் திருக்கோயில்கள், திருமடங்கள், திருமடங்களுடன் இணையாத கோயில்கள், குறிப்பிட்ட அறக்கட்டளைகள், அறக்கட்டளைகள், சமணத் திருக்கோயில்கள் என 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், மதுரை மீனாட்சி அம்மன், திருச்செந்தூர் முருகன், பழனி முருகன் போன்ற பிரசித்தி பெற்ற கோயில்களில் மட்டுமே கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும், தற்போதைய தி.மு.க. ஆட்சியிலும் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். 38 ஆயிரம் கோயில்கள் உள்ள நிலையில், அதிகபட்சம் 500 கோயில்களுக்குள் மட்டுமே அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டனர். மீதமுள்ள கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. ஆனால் நீதிமன்ற உத்தரவின் படி அனைத்து கோயில்களிலும் அறங்காவலர்கள் நியமனம் செய்ய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வாங்கப்பட்டது. ஆனால், கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும், தற்போதைய தி.மு.க.ஆட்சியிலும் அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் அறங்காவலர் பதவிக்கு விண்ணப்பித்து காத்திருப்பவர்கள் எப்போது தங்களுக்கு பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் மனச்சோர்வு அடைந்துள்ளனர். தற்போதைய தி.மு.க. ஆட்சி நான்காண்டுகள் முடிவடைந்து, ஐந்தாவது ஆண்டு பயணிக்கும் நிலையில், தமிழகத்தில் ஒவ்வொரு தாலுகாவிலும் உள்ள அறநிலையத்துறை கோயிலுக்கு விண்ணப்பித்த தி.மு.க.வினர், தங்களுக்கு அறங்காவலர் பதவி கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் தவித்து வருகின்றனர்.