பரமக்குடியில் அழகர் இன்று கோயிலுக்கு திரும்புகிறார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மே 2025 07:05
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் இன்று அழகர் கோயிலுக்கு திரும்புகிறார். மே 12 அதிகாலை 3:20 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி பூ பல்லக்கில் அழகர் வைகையில் இறங்கினார். தொடர்ந்து குதிரை வாகனத்தில் அலங்காரமாகி இரவு வண்டியூர் எனும் காக்கா தோப்பு சோலை பெருமாள் கோயிலை அடைந்தார். மே 13 இரவு தசாவதார சேவை நடந்தது. நேற்று முன்தினம் கருட வாகனத்தில் எழுந்தருளி வைகையில் வலம் வந்தார். தொடர்ந்து இரவு பெருமாள் மட்டா மண்டகப்படியில் அவதார சேவையில் அருள் பாலித்தார். நேற்று இரவு 7:00 மணிக்கு அழகர் சர்வ அலங்காரத்துடன் ராஜாங்க திருக்கோலத்தில் பட்டுப் பல்லக்கில் அமர்ந்தார். பின்னர் இரவு 9:00 மணிக்கு கிரி மண்டகப்படியை அடைந்து மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் கூடி பெருமழை தரிசித்தனர். தொடர்ந்து அனைத்து நாட்களிலும் ராட்டினங்கள், சர்க்கஸ் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று காலை 8:00 மணிக்கு அழகர் மீண்டும் கோடாரி கொண்ட இட்டு அனைத்து வகையான ஆயுதங்களையும் ஏந்தி பூ பல்லக்கில் வைகை ஆற்றை விட்டு கிளம்புகிறார். அப்போது நாள் முழுவதும் முக்கிய வீதிகளில் உலா வந்து மாலை 6:00 மணிக்கு கோயிலை அடைய உள்ளார். இரவு கண்ணாடி சேவையில் மறை பொருளாக அழகர் காட்சி தருவார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.