பதிவு செய்த நாள்
17
மே
2025
09:05
பாலக்காடு அருகே, கல்பாத்தி சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவில், பஜனோற்சவம் மற்றும் கும்பாபிஷேக தின விழா நேற்று துவங்கியது.
கேரளா மாநிலம், பாலக்காடு கல்பாத்தி அருகில் உள்ள சாத்தபுரம் பிரசன்ன மஹா கணபதி கோவிலில், வைகாசி மாதம் கும்பாபிஷேக தின விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு பஜனோற்சவம், கும்பாபிஷேக தின விழா நேற்று துவங்கியது.
நேற்று மாலை 6:00 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்து, விழாவை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக குழு உறுப்பினர்களான பரமேஸ்வரன், முரளி, வாசுதேவன், பாலகணேஷ், பாலசுப்பிரமணியன், ராம்பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து லலிதா ராமமூர்த்தி குழுவினரின் பரதநாட்டியம் நடந்தது.
நாளை, 18ம் தேதி மாலை 4:00 மணிக்கு ஸ்ரீருத்ரகான பாராயணம் நடக்கிறது. 24ம் தேதி அஷ்டபதி பஜனை, திவ்யநாமம், டோலோற்சவம், ராதா கல்யாண உற்சவம், ஆஞ்சநேய உற்சவம், 26ம் தேதி நட்சத்திர சாந்தி ஹோமம், 27ம் தேதி லட்சார்ச்சனை, மாலையில் செண்டை மேளம் முழங்க காழ்ச சீவேலி, குடைமாற்றம் ஆகிய நிகழ்வுகள் நடக்கிறது.
வரும், 28ம் தேதி வரை நடக்கும் விழாவில் பஜனையும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். கும்பாபிஷேக தின நாளான 28ம் தேதி காலை காழ்ச சீவேலி நிகழ்வு நடக்கிறது.