பதிவு செய்த நாள்
14
டிச
2012
11:12
அவிநாசி: அவிநாசியில் தயாரிக்கப்பட்ட ஏலக்காய் மாலைகள், கிரீடங்கள், திருச்சானூருக்கு இன்று அனுப்பப்படுகின்றன. அவிநாசியை சேர்ந்த பாபு என்பவரது மலர் நிலையத்தில் இருந்து திருப்பதி திருமலை மற்றும் திருச்சானூர் பிரம்மோற்சவங்களுக்கு பல்வேறு விதமான மலர் மாலைகள் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன. இம்முறை, திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு (மூலவர்) முழுவதும் ஏலக்காய்களில் தயாரிக்கப்பட்ட மாலை, கிரீடம், காதணி, அட்டிகை, ஜடையலங்காரம் ஆகியன இன்று பயணமாகிறது.
பாபு கூறியதாவது: திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு, ஒன்றரை அடியில் கிரீடம், இரு காதணிகள், அட்டிகை, ஜடையலங்காரம் மற்றும் நான்கு அடியில் மாலை ஆகியன முழுவதும் உயர்ரக ஏலக்காய்களில் உருவாக்கினோம். இடையிடையே அலங்காரத்துக்காக வெட்டிவேர், சில பூக்கள் சேர்த்துள்ளோம். இவை அனைத்தும், பஸ்சில், திருச்சானூர் கொண்டு செல்லப்பட்டு, மூலவருக்கு சாற்றப்படுகிறது. மாலைகள், கிரீடங்கள் தயாரிக்க, தேனி மாவட்டம், போடியிலிருந்து சிறப்பு ரக பச்சை ஏலக்காய்களை தருவித்தோம். மொத்தம் 12 கிலோ ஏலக்காய் பயன்படுத்தி உள்ளோம். திருப்பூரை சேர்ந்த பக்தர்களால், திருச்சானூருக்கு கொண்டு செல்லப்படுகின்றன. 10 தொழிலாளர்கள், இப்பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு அவர் கூறினார்.