பதிவு செய்த நாள்
19
மே
2025
02:05
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவின் தொடர்ச்சியாக இன்று தீர்த்தவாரி நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரமோத்சவம் கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், பிரபல உத்சவங்களான கடந்த 13ம் தேதி கருடசேவை உத்சவமும், 17ம் தேதி தேரோட்டமும் கோலாகலமாக நடந்தது. பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாள் உற்சவமான இன்று காலை ஆள்மேல் பல்லக்கில் வரதராஜ பெருமாள் எழுந்தருளி வீதியுலா வந்தார். வீதியுலா முடிந்ததும், நுாற்றுகால் மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார். அங்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. பின் மண்டபத்தில் இருந்து, சின்ன பெருமாள் என அழைக்கப்படும் ப்ரணதார்த்தி ஹர வரதர், கோவில் வளாகத்தில் உள்ள அனந்தசரஸ் புஷ்கரணி குளத்தில் எழுந்தருளினார். அங்கு, பிற்பகல் 12:30 மணிக்கு தீர்த்தவாரி உத்சவம் நடந்தது. தீர்த்தவாரி உத்சவம் முடிந்ததும் குளத்திற்குள் பாதுகாப்புக்காக கயிறு கட்டப்பட்டு இருந்த பகுதிக்குள் மட்டும் பக்தர்கள் நீராட போலீசார் அனுமதித்தனர்.
இதில், போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களின் கண்காணப்பில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனிதநீராடினர். பக்தர்களின் பாதுகாப்புக்காக கோவில் வளாகம், குளக்கரை மற்றும் குளத்திற்குள் என 300க்கும் மேற்பட்ட போலீசாரும், ஊர்காவல் படையினரும், தீயணைப்பு மீட்புபணி வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். குளத்திற்குள் பொது மக்கள் இறங்காமல் தடுக்கும் வகையில் கயிறு கட்டப்பட்டிருந்தது. தீயணைப்பு மற்றும் போலீசார் சார்பில், மூன்று பைபர் படகுகள் பாதுகாப்புக்காக குளத்திற்குள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தன. பிரம்மோத்சத்தின், 10ம் நாள் உத்சவமான நாளை காலை, த்வாதச ஆராதனமும், இரவு வெட்டிபேர் சப்பரத்துடன் வைகாசி பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.