கள்ளக்குறிச்சி மாவட்ட கோவில்களில் புனரமைப்பு பணி மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2025 02:05
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
கோவில்கள் புனரமைப்பு பணிகளின் நிலை குறித்து இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். அரசு சார்பில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை புனரமைப்பு செய்திட சட்டசபையில் பல்வேறு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி மாவட்டத்தில் உள்ள ஆதிதிருவரங்கம், ரிஷிவந்தியம், ராவத்தநல்லுார், மணலுார்பேட்டை, கச்சிராயப்பாளையம், ஆதனுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. புனரமைப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்டு விரைந்து முடித்து திருக்குடமுழுக்கு மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.