பதிவு செய்த நாள்
21
மே
2025
10:05
சென்னை; ‘கோவில்கள் திறந்து இருக்க வேண்டும்; தினமும் ஒரு வேளையாவது பூஜை நடத்த வேண்டும்’ என, அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே அலங்கியம் கிராமத்தில், திண்டீஸ்வரர் மற்றும் வீரராகவ விநாயகர் கோவில் உள்ளது. நுாற்றாண்டு பழமையான இக்கோவிலுக்கு, பக்தர்கள் ஏராளமான நிலங்களை வழங்கியுள்ளனர். இந்த நிலங்கள் வாயிலாக வருவாய் கிடைத்து வருகிறது. பரம்பரை அறங்காவலர் என்று கூறிக் கொள்ளும் சிவாசலம் என்பவர், கோவில் அர்ச்சகராகவும் உள்ளார். கோவில் நிலங்கள், அறநிலைய துறையால்பொது ஏலத்துக்கு விடப்பட்டு, அதன் வாயிலாக வருவாய் கிடைக்கிறது. இருப்பினும், இக்கோவிலில் பூஜைகள் எதுவும் நடத்தப்படாமல் மூடப்பட்டு உள்ளன. இதையடுத்து, கோவில் சொத்துகளை உரிய முறையில் பராமரித்து, தினமும் பூஜைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கக்கோரி, 2023 மே 18 மற்றும் ஜூன் 20ல், திண்டீஸ்வரர் மற்றும் வீரராகவ விநாயகர் கோவில் செயல் அலுவலருக்கு புகார் மனு அளித்தேன்.
அதேபோல, அறநிலைய துறை ஆணையர் மற்றும் திருப்பூர் மாவட்ட இணை ஆணையர் ஆகியோருக்கு மனு அளித்தேன். ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ், இந்த கோவிலில் பூஜை நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களுக்கு அணுக வசதியாக, மூடியிருக்கும் கோவிலை திறந்து, நிர்வாகியை நியமித்து தினசரி ஒரு நேரமாவது பூஜை நடத்த வேண்டும். இதுதொடர்பாக, நான் அளித்த கோரிக்கை மனுக்களை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க, ஹிந்து அறநிலையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.ஜி.ஐஸ்வர்யா ஆஜராகி, ‘‘பக்தர்கள் வசதிக்காக கோவிலை திறந்து, தினசரி பூஜைகள் மற்றும் விழாக்கள் நடத்த வேண்டும். இதுதொடர்பாக அளித்த கோரிக்கை மனுக்களை பரிசீலித்து, உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்,’’ என்றார். அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ‘தினமும் ஒரு வேளை பூஜை நடத்த, கோவில் செயல் அலுவலர் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதி, ‘பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை வைக்கும் வகையில், கோவில் திறந்து இருக்க வேண்டும். பக்தர்களுக்காக கோவிலில் தினமும் ஒரு வேளை பூஜையாவது நடத்தப்பட வேண்டும்’ என, உத்தரவிட்டார்.