பதிவு செய்த நாள்
22
மே
2025
10:05
அவிநாசி; அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் குழு கோவிலான கிழக்கு ரத வீதியில் உள்ள ஸ்ரீ காசி விநாயகர் கோவிலில், 36 ஆண்டுகளுக்குப் பின், நாளை மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதையொட்டி, கடந்த ஒரு மாதமாக திருப்பணிகள் நடைபெற்றன. இறுதி கட்டமாக கோபுரம் மற்றும் சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டுதல், சுற்றுச்சுவர் வெள்ளை அடித்தல், செட் அமைத்தல் என கடந்த ஒரு வார காலமாக பணிகள் தீவிரமடைந்தன. நேற்று கோவிலை தண்ணீர் கொண்டு கழுவி சுத்தப்படுத்துதல் மற்றும் சிலைகளை சுத்தம் செய்யும் உழவாரப்பணிகள் நடைபெற்றது. நேற்று மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை, விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று கணபதி யாகம், தன ஹோமம், கலாகர்க்ஷணம், யாகசாலை எழுந்தருளல், எண் வகை மருந்து சாத்துதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் முதல் கால வேள்வி பூஜைகள் துவங்குகிறது. நாளை காலை இரண்டாம் கால வேள்வி பூஜைகள், நாடி சந்தனம் ஆகியவற்றுடன், காலை 6:00 மணிக்கு மேல் 7:00 மணிக்குள் கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம் மற்றும் காசி விநாயக பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் தக்கார் சபரீஷ்குமார் மற்றும் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை காலை 7:00 மணி முதல் கிழக்கு ரத வீதியிலுள்ள நகராட்சி வணிக வளாக கடை பக்தர்கள் சார்பில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.