பதிவு செய்த நாள்
22
மே
2025
01:05
திருப்பதி; திருமலையில், வைகாசி மாதம் வளர்பிறையில், தசமி திதி அன்று, அனுமன் ஜெயந்தி நடத்துவது வழக்கம். அதன்படி, இன்று காலை, ஏழுமலையான் கோவில் எதிரில் உள்ள பேடி ஆஞ்சநேயர், வராக சுவாமி கோவில் அருகில் உள்ள குளக்கரை ஆஞ்சநேயர் கோவில்களில், தேவஸ்தானம் சார்பில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழாவை முன்னிட்டு ஸ்ரீவாரி கோயிலுக்கு எதிரே உள்ள ஸ்ரீ பேடி ஆஞ்சநேய சுவாமி மற்றும் நடைபாதையில் ஏழாவது மைலில் அமைந்துள்ள ஸ்ரீ பிரசன்ன ஆஞ்சநேய சுவாமி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருமலையில் உள்ள ஜபாலி தீர்த்தத்திலும் ஒவ்வொரு ஆண்டும் அனுமன் ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படும். அதன்படி ஜபாலி அனுமனுக்கு தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு பட்டு வஸ்திரங்களை வழங்கினார். தொடர்ந்து, திருப்பதி தேவஸ்தான தலைவர் பி.ஆர். நாயுடு, கூடுதல் இஓ வெங்கையா சவுத்ரி ஆகியோர் பேடி ஆஞ்சநேயசுவாமி கோவில் விழாவில் பங்கேற்றனர். பக்தர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளின் வசதிக்காக காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை திருமலையிலிருந்து 7வது மைல் வரை சென்று திரும்ப இலவச போக்குவரத்து வசதியையும் திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.