முடியனூர் தூக்கு தேர் திருவிழா; 60 அடி உயர தேரை தோளில் சுமந்து ஊர்வலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2025 05:05
தியாகதுருகம்; பிரசித்தி பெற்ற முடியனூர் தூக்கு தேர் திருவிழாவில் 60 அடி உயர தேரை பக்தர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக சென்றனர்.
தியாகதுருகம் அடுத்த முடியனுர் திரவுபதி அம்மன் கோவில் தூக்கு தேர் திருவிழா மிகவும் பிரசித்தமானது. கடந்த 400 ஆண்டுகளாக 60 அடி உயரத்திற்கு சக்கரம் இல்லாத தேரை அலங்கரித்து அதனை பக்தர்கள் தோளில் தூக்கி ஊர்வலமாக கொண்டு செல்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கொண்டாடப்படுகிறது. திருவிழா கடந்த 16 ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி சர்வ அலங்காரத்துடன் திருவீதி உலா நடந்தது. இன்று காலை 60 அடி உயர தூக்கு தேர் அலங்கரிக்கப்பட்டு அதில் திரவுபதி அம்மன் மற்றும் பஞ்சபாண்டவர்கள் உற்சவர் சிலையை வைத்து 100 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தோளில் சுமந்து ஊர்வலமாக சென்றனர். ஊராட்சி மன்ற தலைவர் சுப்பு மகாலிங்கம் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் விழாவில் கலந்து கொண்டனர். நேற்றும் இன்றும் மொத்தம் 6 முறை தேரை தோளில் சுமந்து ஊர்வலமாக சென்று வழிபாடு செய்கின்றனர். இதனைக் காண சுற்றுவட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை காலை அரவான் களபலி, அதைத்தொடர்ந்து காளி கோட்டை இடித்தல், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. பின்னர் குழந்தைகளை ஊஞ்சல் தேரில் வைத்து சுற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.