பதிவு செய்த நாள்
23
மே
2025
10:05
தஞ்சாவூர்; கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சியில், திருக்கண்டீஸ்வரமுடையார் கோவில் உள்ளது. இக்கோவில் குறித்து திருக்கண்டீஸ்வரம் கவுன்சிலர் செல்வகுமார் அளித்த தகவலின்படி, தஞ்சை சரஸ்வதி மகால் நுாலக வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர் வரலாற்று ஆய்வாளர் மணிமாறன் கூறியதாவது: திருக்கண்டீஸ்வரம் கோவில் 1,400 ஆண்டு பழமையானது. கோவிலின் கருவறை முன்மண்டபத்து தென் திசையின் இடதுபுற அதிட்டானத்தில் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அக்கல்வெட்டு, சிவபெருமானுக்குப் புகழ் சேர்க்கும் வகையில், சோழகுலவல்லி நல்லுாரைச் சேர்ந்த வாணாதிபன் என்பவர் ‘திருவடுகூர்ப்புராணம்’ என்ற நுாலை இயற்றியதாக குறிப்பிடுகின்றது. இந்த நுால் சுவடி வடிவிலும், அச்சு நுால் வடிவிலும் கூட இன்று கிடைக்கப்பெறவில்லை. இந்நுால் கிடைப்பின், கல்வெட்டில் திருக்கண்ணீஸ்வரமுடையார் என்று சுட்டப்படும் இக்கோவிலின் வரலாற்று செய்தியும் இவ்வூரின் வரலாற்றுச் செய்தியினையும் இன்னும் விரிவாகக் காண முடியும்.
கோவில் முகமண்டபத்தின் வடபுற அதிட்டானத்தில் துவங்கி மேற்குப் பகுதி அதிட்டானம் வரை நான்கு வரிகள் கொண்ட நீண்ட கல்வெட்டுத் தொடர் வெட்டப்பட்டுள்ளது. இதில், இக்கோவிலில் திருப்பணி செய்தது பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இக்கல்வெட்டின் இறுதிப் பகுதியில் தெலுங்கு மொழி எழுத்தில் ‘அம்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு கல்வெட்டுகளும் கோவில் களப்பணியில் புதிதாகக் கண்டறியப்பட்ட செய்திகளாகும். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இக்கோவில் வளாகத்தில் கட்டுமானப் பணிக்காகப் பள்ளம் தோண்டும்போது, சோழர் காலத்தைச் சேர்ந்த பூஜைக்குப் பயன்படுத்திய உலோகத்தாலான பொருட்கள் மற்றும் நந்தாவிளக்கு ஒன்றும் கண்டறியப்பெற்று அவை இங்கு பாதுகாக்கப் பெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.