சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் கோயில் வைகாசி விழா; விநாயகர் ஊர்வலத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மே 2025 04:05
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ஊர்வலத்துடன் இன்று துவங்கியது.
சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா ஜூன் 1ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. திருவிழா நடத்த காணிக்கை பெறும் ஐதீகத்திற்காக உற்சவ விநாயகர் கிராமத்தில் உள்ள சந்திவீரன் கூடத்தில் எழுந்தருளினார். மே 22 இரவு 10:00 மணிக்கு கோயிலில் இருந்து மாடுகள் பூட்டப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளிய விநாயகர் கீழக்காடு ரோடு வழியாக கிராமத்திற்கு அழைத்துவரப்பட்டார். வழி நெடுகிலும் முக்கிய இடங்களில் கிராம மக்கள் வழிபாடு செய்து திருவிழா நடத்த காணிக்கை வழங்கினர். அதிகாலை 2:00 மணிக்கு சந்திவீரன்கூடம் வந்து சேர்ந்த விநாயகருக்கு தொடர்ந்து 10 நாள் கோயிலில் இருந்து நைவேத்தியம் கொண்டுவரப்பட்டு வழிபாடு நடக்கும். 10 வது நாளான ஜூன் 1ஆம் தேதி காணிக்கை பணத்துடன் விநாயகர் கோயிலுக்கு திரும்புவார். அந்தப் பணத்தைக் கொண்டே ஐயனாருக்கு திருவிழா நடத்தப்படுவதாக ஐதீகம். அன்றைய தினம் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கும். தொடர்ந்து பத்து நாள் மண்டகப்படியாக நடைபெறும் இத் திருவிழாவில் ஜூன் 5ல் திருக்கல்யாணம், ஜூன் 9ல் தேரோட்டம், ஜூன் 10ஆம் தேதி பூப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி கிராமத்தார்கள் தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.