பதிவு செய்த நாள்
15
டிச
2012
01:12
கிராமங்களில் பழக்க வழக்கம், பண்பாடு, பாசம், நேசம் இன்றும் மாறாமல் உள்ளது. கிராமத்தில் உள்ள வாய்க்காலும், வரப்பும், மண்ணும், மரமும் ஒவ்வொரு கதை சொல்லும். நகரங்களில் சட்டம் போட்டு கட்டுப்படுத்த நினைத்தாலும் நடக்காத சில விஷயங்கள், கிராமங்களில் அசாதாரணமாக சாமி குத்தமாகி விடும் என சொன்னாலே போதும்; தானாகவே கட்டுக்குள் வந்துவிடும். கிராமத்தில் வறட்சியான பூமியில் வளரும் கருவேல மரங்களால் தான் வறட்சி ஏற்படுவதாக அறிவியல் கூறுகிறது. ஆனால் சிவகங்கை திருப்புவனத்திலிருந்து 15 கி.மீ., தொலைவில் செம்மண் பூமி கிளாதரியில், பத்து ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் செழித்து வளரும் கருவேல மரங்களை யாருமே வெட்டியதில்லை என்றால் நம்ப முடிகிறதா?. பொய்கை கண்மாயை ஒட்டி, வானமே கூரையாய் வெட்டவெளியில், காவல் தெய்வமாய் நிற்கின்றனர், பொய்கை முனியாண்டியும், அய்யனாரும். சொல் வாக்கு மாறும் பொய்யர்களை பழி தீர்க்க, காசு வெட்டிப் போடுகின்றனர்.
நம்ப முடியாத(!?) செய்வினை கோளாறுக்கு ஓலைப்பாயை கிழித்து போட்டால் போதும், உடனே சரியாகும் என்று நம்புகின்றனர். சாமி காக்கும் இடத்தில் உள்ள மரங்களை வெட்டினால் சாமி குத்தத்திற்கு ஆளாக நேரிடும். சாமி குத்தம்னா... மரம் வெட்டியவர்கள் வீடு போய் சேரமுடியாது, வீட்டிற்கு பாம்பு வரும், விஷ ஜந்துக்கள் தீண்டும்... என பட்டியல் நீள்வதால், யாரும் மரங்களை தீ(சீ)ண்டுவதில்லை. காய்ந்து விழும் விறகுகளைத் தான், காவல் தெய்வத்திற்கு பொங்கலிடுகின்றனர். நகரங்களில் மனிதநேயம் மறந்து போன மனிதர்கள், முகவரி இன்றி வாழ்கின்றனர். கிராமங்களில் மரங்கள் கூட, அரிவாள் படாத கருவை என்ற முகவரியோடு வளர்கின்றன.