திருநள்ளாறு கோவிலுக்கு வெள்ளி பெட்டகம்: தருமபுரம் ஆதினம் வழங்கல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2025 10:06
காரைக்கால்: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலுக்கு, வெள்ளி பெட்டகத்தை தருமபுரம் ஆதினம் வழங்கினார்.
காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனீஸ்வரபகவான் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், நடந்த 10 நாள் பிரம்மோற்சவ விழாவில் தருமபுரம் ஆதினம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார். அப்போது, தருமபுரம் ஆதினம் சார்பில் வெள்ளி பெட்டகத்தை, அவர் வழங்கினார். இதுகுறித்து தருமபுரம் ஆதினம் கூறுகையில், திருநள்ளாறு சனீஸ்வர பகவானை தரிசனம் செய்ய நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து வருகின்றனர். தருமபுர ஆதினத்துக்குட்பட்ட 27 பெரிய கோவில்களில், சப்த விடங்க தலங்களில் ஒன்றாக திருநள்ளாறில் இரும்பு பெட்டகம் இருப்பதால், வெள்ளி பெட்டகம் ஆதினம் சார்பில் கோவிலுக்கு வழங்கப்பட்டது. தமிழகத்தில் ஆதீனம் சார்பில் 40 கல்வி நிறுவனங்களாக வேத பாடசாலை, தேவார பாடசாலை உள்ளது போல் திருநள்ளாறில் தர்மபுரம் ஆதினம் சார்பில் கல்லுாரி துவங்கப்பட்டு நடப்பு ஆண்டு சேர்க்கை நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருநள்ளாறு வரும் பக்தர்கள் வசதிக்காக இந்தியா முழுவதும் இருந்து ரயில்கள் இயக்கப்பட வேண்டும். இதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் முருக பக்தர் மாநாடு குறித்து கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. விரைவில் மாநாடு நடைபெறும் என, கூறினார்.