சூலுார் வெற்றி வேலர் ஆன்மிக அறக்கட்டளை சார்பில், வைகாசி விசாகத்தை ஒட்டி, உலக நலன் வேண்டியும் சூலுார் பழனியாண்டவர் கோவிலில், முருகர் அவதார கீர்த்தனை விழாவும், 48 வேல் பூஜையும் நடந்தது. மேற்கு அங்காளம்மன் கோவிலில் இருந்து, 48 வேல்களை பக்தர்கள் மேள, தாளத்துடன் ஏந்தி பழனியாண்டவர் கோவிலுக்கு வந்தனர். பள்ளபாளையம் மாரியம்மன் கோவில், பழனி பாதயாத்திரை காவடி குழுவினர் காவடி எடுத்து ஆடி வந்தனர். தொடர்ந்து, வேல் பூஜை துவங்கியது. பெண்கள், வேல்களுக்கு, அபிஷேகம் செய்தபின், பூக்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்தனர். சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். முருக வழிபாட்டின் பலன்கள் குறித்து வக்கீல் இள்ங்குமார் சம்பத் பேசினார். முருகன் கீர்த்தனைகளை கலைவாணி பாடினார். தொடர்ந்து ஸ்ரீ. தேவி இசைக்குழு, சூலுார் ஐயப்பன் குழுவினரின் பக்தி இன்னிசை நடந்தது.