மார்கழி மாதப் பிறப்பு தென்காசி கோயில்களில் வழிபாடு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17டிச 2012 11:12
தென்காசி: மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு தென்காசி பகுதியில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தமிழ் மாதங்களில் எப்போதும் மார்கழி மாதத்திற்கு தனிச் சிறப்பு உண்டு. இந்த சிறப்பு மிக்க மார்கழி மாதத்தில் தான் திருப்பாவையை ஆண்டாளும், திருவெம்பாவையை மாணிக்க வாசகரும், உலகுக்கு அருளினர். மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கும் வைபவமும், சிவன் கோயில்களில் திருவாதிரை திருவிழா ஆருத்ரா தரிசனமும் சிறப்பாக நடைபெறும். இத்தனை சிறப்புகளை கொண்ட மாதம் நேற்று பிறந்ததையடுத்து தென்காசி பொருந்தி நின்ற பெருமாள், விண்ணகரப்பெருமாள், கிருஷ்ணர் ஆகிய கோயில்களிலும், செங்கோட்டை பெருமாள் கோயில், கீழப்பாவூர் நரசிம்மர் கோயில்களில் அதிகாலையில் நடைகள் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பஜனை குழுவினரும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி வீதிகளில் வலம் வந்தனர்.