பதிவு செய்த நாள்
17
டிச
2012
12:12
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளுறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்
பொருள்: முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற, என்கிறார்கள்.தூங்கிக் கொண்டிருந்த தோழி, ""ஏதோ தெரியாத்தனமாக தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச வேண்டுமா? இறைவனின் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த விரதமிருந்ததில் அனுபவமில்லை. மேலும், பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே! என வருந்திச் சொல்கிறாள்.வந்த தோழியர் அவளிடம், ""அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம், என்றனர்.
விளக்கம்: ஒருநாள் கோயிலுக்கு போவது, ஆண்டவனை விழுந்து விழுந்து வணங்குவது, மறுநாள் ஏதோ விரக்தியில் அல்லது எதிர்பார்ப்பு நிறை வேறாமல் போனதும் அவனை வணங்குவதை விட்டுவிடுவது...இதெல்லாம் நிஜ பக்தியாக முடியாது என்பதே இந்தப் பாடல் உணர்த்தும் கருத்து.