பதிவு செய்த நாள்
18
டிச
2012
10:12
நீங்கள் தர்மம் செய்யும்போது உங்களைப் பற்றி தம்பட்டம் அடிக்காதீர்கள். வெளிவேடக்காரர், மக்கள் புகழ வேண்டுமென்று தொழுகைக் கூடங்களிலும், சந்துகளிலும் நின்று அவ்வாறு செய்வர். அவர்கள் தங்களுக்குரிய கைம்மாறு பெற்றுவிட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் தர்மம் செய்யும்போது உங்கள் வலது கை செய்வது இடது கைக்கு தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும். மறைவாய் உள்ளதைக் காணும்உங்கள் தந்தையும், உங்களுக்கு கைம்மாறு அளிப்பார், என்கிறார் இயேசுநாதர்.
இருப்பவர்கள், இல்லாதவர்களின் தேவையை அறிந்து அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது அடுத்திருப்பவர்களுக்கு தெரிய வேண்டுமென்பதே, பெரும்பாலானவர்களின் விருப்பமாக உள்ளது. எதை நினைத்து உதவி செய்கிறார்களோ, அந்தப் பெருமையும், புகழ்ச்சியும் மண்ணுலகில் கிடைத்து விட்டால், விண்ணுலகிலிருந்து எதையும் அவர்களால் பெறமுடியாது. மண்ணுலகிலிருக்கும் எதுவுமே தனக்கு சொந்தமில்லை என்பதை உணர்ந்திருந்தாலும், மனித மனம் அதன்மேல்தான் பற்றி படர்ந்து கொண்டிருக்கிறது. அதுவே தற்பெருமைக்கும், தவறான பாதைக்கும் வழிவகுக்கிறது. அளவில்லாத அறச்செயல்களை, எதிர்பார்ப்பில்லாமல் எவரொருவர் செய்து கொண்டிருக்கிறாரோ, அவருக்கே விண்ணுலகில் மணிமகுடம் சூட்டப்படும். அவரது அடுத்தடுத்த தலைமுறையினர், அவர் செய்த புண்ணியத்தால் மண்ணுலகில் செழித்திருப்பர்.