சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணி துவங்க பூஜைகள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜூன் 2025 12:06
அவிநாசி; கொங்கேழு சிவ ஸ்தலங்களில் முதன்மையாக விளங்கும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வரலாற்று சான்று உடையதாக விளங்கும் ஸ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார் கோவில், அவிநாசி, மங்கலம் ரோட்டில் அமைந்துள்ளது. முதலை உண்ட பாலகனை பாடல் பாடி மீட்டெடுத்த சுந்தரமூர்த்தி பெருமானுக்கு இங்கு கோவிலும், முதலை வாயில் இருந்து பிள்ளையை முழுவதுமாக உயிருடன் மீட்டெடுத்த தாமரைக்குளக்கரையும் அமைந்துள்ளது. கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகளான நிலையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து சுவர்களில் விரிசல்; சுற்றுப்புறத்தில் உள்ள மண்டபங்களில் உள்ள துாண்கள் இடிந்து விடும் நிலையில் காணப்பட்டது. கோவில் மற்றும் மண்டபங்களை மராமத்து பணிகள் செய்து கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் மேற்கொள்ள பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அறநிலையத்துறை செயற்பொறியாளர், உபயதாரர் உள்ளிட்டோர் கடந்த சில தினங்களுக்கு முன் திருப்பணிகள் துவங்குவதற்கான ஆய்வுகளை மேற்கொண்டனர். நேற்று, அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், ராமராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், அறங்காவலர்கள் பொன்னுசாமி, விஜயகுமார், கவிதாமணி, கோவில் செயல் அலுவலர் சபரீஷ் குமார், திருப்பூர் குமரன் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் செந்தில் மற்றும் கோவில் சிவாச்சார்யார்கள் முன்னிலையில் சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணி வேலைகள் துவங்க பூஜைகள் நடைபெற்றது.