பதிவு செய்த நாள்
04
ஜூலை
2025
11:07
மயிலாடுதுறை; திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் 7ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் தொடங்கின.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இக்கோவிலில் மூர்த்தி, தீர்த்தம், தல விருட்சம் ஆகியன மூன்றாக அமைந்துள்ளது. நவகிரகங்கள் புதன் பகவான், சிவனின் 64 மூர்த்தி பேதங்களும் ஒன்றான அகோர மூர்த்தி ஆகியோர் தனி சன்னதிகள் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். காசிக்கு சமமான 6 தளங்களில் முதன்மையான தளமாகவும், சக்தி பீடங்களில் 51வது பீடமாகவும் திகழ்கிறது. ஆதி சிதம்பரம் என போற்றப்படும் இத்தளத்தில் சிவபெருமான் 9 தாண்டவங்களை ஆடியுள்ளார். பட்டினத்தடிகள் சிவதீட்சை பெற்ற தளமாகவும் மெய் கண்டார் அவதரித்த ஸ்தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்பு மிக்க கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2016ம் ஆண்டு நடந்தது.
9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தமிழக அரசு ரூ. 2 கோடியே 5 லட்சம் நிதி, நன்கொடையாளர்கள் அளித்த ரூ 25 கோடி நிதி ஆகியவற்றை கொண்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது வரும் ஏழாம் தேதி திங்கட்கிழமை துவாதசி திதி அனுசு நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் காலை 9 மணி முதல் 10:20க்குள் சரியாக 9:05 மணிக்கு சிம்ம லக்கனத்தில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கிழக்கு கோபுரம் அருகே நான்கு சன்னதிகளாக பிரம்மாண்ட யாகசாலை அமைக்கப்பட்டு, புனித நீர் நிரப்பப்பட்ட 95 கடங்கள் நிறுவப்பட்டு, 86 யாக குண்டங்கள் அமைத்து, 120 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கும்பலங்காரம், கலாகர்ஷனம், யாக சால பிரவேசம் செய்யப்பட்டு முதல் கால யாகசாலை பூஜைகள் இனிய இரவு தொடங்கின. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர் தேவாரம், வேத பாராயணம் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன் தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.