ராமநாதபுரம்; -ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் பிரம்மோற்ஸவ விழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். கோயில் நிர்வாகத்தினர் தேர் வரும் வீதிகளில் முன் ஏற்பாடுகள் செய்யாததால் தேர் நகர்வதில் தாமதம் ஏற்பட்டது. ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான கோதண்டராமர் கோயிலில் பிரம்மோற்ஸவ விழா ஜூன் 26ல் அனுக்ஞையுடன் துவங்கியது. திருவிழா நாட்களில் காலையில் பல்லக்கு, இரவு நேரங்களில் சுவாமி தோளுக்கினியான் வாகனம், சிம்மவாகனம், கருட வாகனம், ஆஞ்சநேயர் வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். ஜூலை 2 ல் சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. ஏழாம் நாளில் இந்திர விமானம், புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது. 9 ம் திருநாளான இன்று தேரோட்டம் நடந்தது. காலை 8:30 மணிக்கு தேரில் சுவாமி எழுந்தருளினார். தேரோட்டத்தின் போது தேர் செல்லும் வழியில் உள்ள மரக்கிளைகள், மின் வயர்களை ஒழுங்கு படுத்தும் பணியை கோயில் நிர்வாகத்தினர் முன் கூட்டியே செய்யாததால் தேர் கும்பத்தில் மின் வயர்கள் உரசி சென்றன. மரக்கிளைகளை தேர் செல்வதற்கு முன்பு வெட்டினர். இதன் காரணமாக தேர் தாமதமாக சென்றது. இது போன்ற பணிகளை தேர் செல்வதற்கு முதல் நாளில் செய்திருந்தால் இது போன்று தேரோட்டத்தின் போது இடையூறுகள் இல்லாமல் இருந்திருக்கும். நல்ல வேளையாக எந்த விபத்தும் இல்லாமல் தேர் நிலைக்கு வந்தது. இன்று 10 ம் நாள் தீர்த்த உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.