வஞ்சினிப்பட்டியில் மொகரம் பூக்குழி திருவிழா; இந்து, முஸ்லிம்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூலை 2025 06:07
திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் வஞ்சினிப்பட்டியில் மொகரம் பண்டிகையை முன்னிட்டு கிராமத்தினர் பூங்குழி இறங்கி வழிபட்டனர். இவ்விழாவை இந்துக்கள், முஸ்லிம்கள் இணைந்து மத நல்லிணக்க விழாவாக கொண்டாடுகின்றனர்.
வஞ்சினிபட்டி கிராமத்தில் இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இணைந்து மொகரம் பண்டிகையை 17 ம் நூற்றாண்டிலிருந்து நான்கு நூற்றாண்டுகளாக கொண்டாடி வருகின்றனர். இத்திருவிழாவை இந்துக்கள் அல்லாசாமி பூக்குழித் திருவிழா என்கின்றனர். பத்து நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. பத்து நாட்களும் முஸ்லிம்கள் சைவம் சாப்பிட்டு விரதம் இருந்துள்ளனர். கிராமத்தினருக்கும் இந்து விருந்தினருக்கும் அசைவ விருந்து நடைபெறுகிறது. நேற்று இரவு மொகரம் பண்டிகைக்காக இஸ்லாமியர்களால் பாத்தியா ஒதப்பட்டது. உள்ளூா் கிராமத்தினர் மட்டுமின்றி விருந்தினர்களாக வந்த இந்துக்களும் மல்லிகை பூ, சா்க்கரை வைத்து அல்லாவை நினைத்து வழிபடுகின்றனர்.
பின்பு அங்குள்ள கூடாரத்தில் தொழுகை நடத்தப்பட்டு, அதிகாலை 4 மணியளவில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. கூடாரம் வாசலில் மிகப்பிரமாண்டமான வளர்க்கப்பட்ட பூக்குழியை, 3 முறை சுற்றி வலம் வருகின்றனா். தொடர்ந்து அதிகாலையில் கிராமத்தினர் சட்டை அணியாமல் பூக்குழிக்குள் இறங்கி நெருப்பை இரு கைகளால் அள்ளி வாரி இறைத்தனா். அப்போது பூக்குழிக்களில் இருந்த நெருப்பை மண்வெட்டியால் அள்ளி பெண்களின் முந்தானைகளில் வழங்குகின்றனர். பெண்கள் குலவையிட்டவாறே வாங்கி நெஞ்சில் வைத்து பின்பு கீழே கொட்டுகின்றனர். பூக்குழிச்சாம்பலை இஸ்லாமியர்கள் இந்துககளுக்கு நெற்றியில் பூசி விடுகின்றனர். இந்துக்களும், முஸ்லிம்கள் இணைந்து 350 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தும் இவ்விழாவில் சுற்றுவட்டாரக் கிராமத்தினரும் பங்கேற்கின்றனர். மொகரம் பண்டிகைக்கு பாத்தியப்பட்ட சையது முகையதீன் குடும்ப்ததினர் தொழில் நிமித்தமாக வெளியூர் சென்று விட்டனர். இதனால் 2004க்கு பின் விழா தடைப்பட்டது பிறகு மீண்டும் கிராமத்தினர் சென்று சையது முகையதீன் குடும்பத்தினரை அழைத்து வந்து இவ்விழாவை நடத்தி வருகின்றனர்.