உத்திரமேரூர்; -திருப்புலிவனத்தில் உள்ள வேலாத்தம்மன், பரமாத்தம்மன் ஆகிய இரண்டு கோவில்களை புதுப்பிக்க, ஹிந்து சமய அறநிலையத் துறையினர் தேர்வு செய்துள்ளனர்.
தமிழகம் முழுதும் ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், கிராமப்புற கோவில்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதியில் உள்ள கோவில்களை, ஆண்டுதோறும் புதுப்பிக்க நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 2025 -–- 26ம் நிதி ஆண்டில், உத்திரமேரூர் ஒன்றியத்தில் இரண்டு கோவில்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில், திருப்புலிவனம் கிராமத்தில் வேலாத்தம்மன் மற்றும் பரமாத்தம்மன் கோவில்கள், தலா இரண்டரை லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில், ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி செயற்பொறியாளர் சதாசிவம், நேற்று, திருப்புலிவனத்தில் உள்ள வேலாத்தம்மன், பரமாத்தம்மன் கோவில்களை பார்வையிட்டார். அப்போது, அவர் மேற்கண்ட இரண்டு கோவில்களை புதுப்பிக்கும் பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக தெரிவித்தார். வேலாத்தம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் குமார் தேவ் உட்பட பலர் உடனிருந்தனர்.