திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்; யானையில் வந்த புனித தீர்த்தம்.. நாளை யாக சாலை பூஜை துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2025 05:07
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் கும்பாபிஷேகத்திற்காக நாளை (ஜூலை 10) மாலை 5:00 மணிக்கு முதல்கால யாக சாலை பூஜை துவங்குகிறது. யாகசாலையில் பிரதான பூஜையில் பங்கேற்கும் சிவாச்சாரியார்கள் இன்று காலை கோயிலில் இருந்து புறப்பாடாகி சரவணப் பொய்கையில் எழுந்தருளியுள்ள ஆறுமுக நயினார் கோயிலில் குடங்களில் புனித நீர் நிரப்பி பூஜை செய்தனர். பின்பு சரவண பொய்கையில் அவர்கள் புனித நீராடினர்.
யானையில் புனித தீர்த்தம்: யாக சாலையில் திருப்பரங்குன்றம், ராமேஸ்வரம் உள்பட ஏழு ஸ்தலங்களின் புனித நீர் நிரப்பி பூஜை செய்யப்படுகிறது. சுப்பிரமணிய சுவாமி கோயில் யானை தெய்வானை புத்துணர்வு முகாம் சென்றுள்ளதால் கும்பாபிஷேகத்திற்கு வேறு யானை கொண்டு வர வேண்டும் என பக்தர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தர்மபுர மடத்திலிருந்து கும்பாபிஷேகத்திற்காக யானை வரவழைக்கப்பட்டுள்ளது. அந்த யானையின் மீது பொய்கையில் இருந்து தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்டது.
புனித மண் எடுத்தல்: பூர்வாங்க பூஜையின் 6ம்நாளான இன்று மாலை சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோயிலில் வில்வ மரத்தின் அடிப்பகுதியில் இருந்து புனித மண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அந்த மண் யாக சாலையில் வைக்கப்பட்டது. யாகசாலை பூஜைக்காக நாளை காலை சூரியனிடமிருந்து நெருப்பு பெறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்குகிறது. யாக பூஜைக்காக யாகசாலைகளில் பணிகள் நிறைவுற்று தயார் நிலையில் உள்ளன. யாகசாலையில் யாகம் வளர்க்கும் பொழுது யாகசாலையில் பொருத்தப்பட்டுள்ள பலகைகள், கலர் பேப்பர்களில் தீ பரவுவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யாகசாலை முழுவதும் பாதுகாப்பு கெமிக்கல் ஸ்பிரே செய்யும் பணி இன்று நடந்தது.