ராமேஸ்வரம் கோயிலில் புனித நீராடி ஜப்பான் பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09ஜூலை 2025 05:07
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் செய்தனர்.
ராமேஸ்வரம் டோக்கியோவில் உள்ள சிவா ஆதீனமடம் ஆசான் பாலகுங்கோ குருமணி தலைமையில் ஹிந்து ஜப்பான் பக்தர்கள் 20 பேர் தமிழகம் வந்துள்ளனர். இவர்கள் தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களில் பூஜை, அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அதன்படி இன்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்த ஜப்பான் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை புனித நீராடினார்கள். பின் சுவாமி அருகில் உலக நன்மைக்காக ருத்ர பூஜை, யாக பூஜை செய்து பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து பாலகுங்கோ குருமணி கூறியதாவது : தமிழ் கலாச்சாரம், பண்பாடு, சமய சடங்குகளை அறிய தமிழகத்தில் முக்கிய கோயில்களில் தரிசித்து வருகிறோம். திருச்செந்தூர் முருகன் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றோம். மேலும் ஜூலை 15 வரை தமிழகத்தில் ஆன்மிகம் சுற்றுப்பயணம் செய்து தஞ்சாவூர், திருவண்ணாமலை, கும்பகோணம் உள்ளிட்ட பலபகுதியில் உள்ள கோயிலுக்கு செல்ல உள்ளோம். பின் வட மாநிலத்தில் உள்ள கோயில்களில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஆக.,ல் ஜப்பான் செல்வோம் என்றார்.