சுவாமிகள் நேற்று ராம்நகர் கோதண்டராமர் கோவிலிற்கு விஜயம் செய்தார். பக்தர்கள் மேளதாளங்கள் முழங்க மலர்கள் துாவி சுவாமிகளை வரவேற்றனர். இன்று ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் சாதுர்மாஸ்ய விரத மஹோத்ஸவத்தை வேதவியாச பூஜைகளுடன் துவக்கினார். காலை 9:00 மணிக்கு சுக்ல யஜூர் வேத பாராயணம் நடந்தது தொடர்ந்து சுவாமிகள் வேதவியாச பூஜைகளை துவக்கினார். வேதங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் வியாசர். அதனால் அவரை பிராராத்தனை செய்து ஆவாஹனம் செய்து மலர்களை துாவி வழிபட்டார்.
வேதவிற்பன்னர்கள் வேதமந்திரங்களை பாராயணம் செய்ய, சுவாமிகள். ரிஷிபரம்பரை, சனாதனம், சனத்குமாரம், சனந்தனம், கிருஷ்ணபஞ்சகம், வியாசபஞ்சகம், குருபஞ்சகம், ஐந்து குருக்கள், இந்திராதி லோகபாலகர்கள், தேவாதிதேவர்களை ஆராதனை செய்து பூஜைகளை துவக்கினார். தொடர்ந்து சாலக்கிராமங்களை எழுந்தருளுவித்து கிருஷ்ணருக்கான பூஜைகளை நிறைவேற்றினார். அப்போது பால், தயிர், பன்னீர் உள்ளிட்ட சகல திரவியங்களால் பூஜை நடந்தது. இதில் ராமகிருஷ்ண கனபாடிகள் உள்ளிட்ட வேதாந்திகள் பங்கேற்றனர். வேதவியாசபூஜைகளின் நிறைவில் பக்தர்கள் அனைவருக்கும் அட்சதை வழங்கப்பட்டது. தொடர்ந்து 60 நாட்களுக்கும் இந்த பூஜைகள் தொடரும் இன்று அம்பாளுக்கும், சந்திரமவுலீஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடுகளும் வேதகோஷங்களும் நடைபெறும்.