வாலாஜாபாத்; தம்மனுார் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 87 லட்சம் ரூபாயில், திருப்பணி நடைபெற உள்ளதையடுத்து, பாலாலய விழா இன்று நடந்தது.
வாலாஜாபாத் அடுத்த, தம்மனுாரில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ், காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. 1,000 ஆண்டுகள் பழமையான இக்கோவில் முறையான பராமரிப்பின்றி நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வந்தது. மழைக்காலங்களில் கோவில் மண்டபத்திற்குள் மழைநீர் சொட்டுவதோடு சிதிலமான விமான கோபுரம் உள்ளிட்ட கட்டடங்கள் இடிந்து விழக்கூடும் என்ற அச்சம் உள்ளது. இதனால் இக்கோவிலை புதுப்பிக்க அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனிடையே கோவிலில் திருப்பணி மேற்கொள்ள ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 87 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பணி துவக்கத்திற்காக நேற்று, காலை 9:00 மணிக்கு கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து வாஸ்து சாந்தி, விக்னேஸ்வரா, நவக்கிரகம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், உத்திரமேரூர் தி.மு.க., – எம்.எல்.ஏ., சுந்தர், ஹிந்து சமய அறநிலைத் துறை இணை ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் தியாகராஜன், அறங்காவலர் குழு நிர்வாகிகள் சுந்தரி, தேவராஜன், கர்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.